அகோங்கை அவமதித்தனர், உறுப்பினர்களின் அறிக்கைகள் கட்சியின் நிலைப்பாடு அல்ல – பி.கே.ஆர்.

மாட்சிமை தங்கியப் பேரரசரை அவமதித்ததாக, தற்போது விசாரிக்கப்பட்டு வரும் பி.கே.ஆர். உறுப்பினர் இஸ்வர்டி மோர்னியின் அறிக்கை, கட்சியின் நிலைப்பாட்டைச் சிறிதும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அதன் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர் பாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.

இஸ்வர்டி, சரவாக், பெட்ரா ஜெயா கிளையில் பதிவு செய்யப்பட்ட பி.கே.ஆர். உறுப்பினர் என்பதை ஃபாஹ்மி உறுதிப்படுத்தினார், ஆனால் அவர் மாநிலத்திலோ அல்லது மத்தியத்திலோ எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

“கட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, மலாய் ஆட்சியாளர்கள் நிறுவனத்தை ஆதரிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு கட்சியான பி.கே.ஆரின் நிலைப்பாட்டை அவர் ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

இஸ்வர்டி மோர்னி

“வீடியோவில் வெளியான அவரது முந்தைய உரை குறித்து, பி.கே.ஆர். அரசியல் பணியகத்தில் கேள்வி எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டது, கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது,” என்று ஃபாஹ்மி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவேற்றிய, மாமன்னரை அவமதித்ததாகக் கூறப்படும் வீடியோ மீதான விசாரணைக்கு உதவ, போலிசார் அவரை வீட்டிலேயேத் தடுத்து வைத்திருப்பதாக இஸ்வர்டி நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, அவர் டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதன் பிறகு அவர் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவில்லை.

அவரைக் கைது செய்வது குறித்து, மலேசியாகினி போலீசாரிடம் உறுதிப்படுத்த முயற்சிக்கிறது.

இதற்கிடையில், பி.கே.ஆர். உறுப்பினர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்தால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவது உட்பட, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபாஹ்மி கூறினார்.

“இருப்பினும், இஸ்வர்டி வீடியோ பிரச்சினை போலிஸ் விசாரணைக்கு உட்பட்டுள்ளதால், பி.கே.ஆர். அவர் மீது அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு முன் விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.