மக்கள் தடுப்பூசிகளைத் தேர்வு செய்ய முடியாது – அரசாங்கம் முடிவு

பொதுமக்களுக்கு அவர்கள் பெறும் தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை வழங்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதிப்பது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கைரி தெரிவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.

“நாங்கள் இதை முதலில் கருத்தில் கொண்டோம், ஆனால் இப்போது எங்கள் கவனம் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் உள்ளது. எனவே, எங்களிடம் உள்ளதைக் (தடுப்பூசிகளை) கொடுப்போம்.

கோலாலம்பூர், மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தின் (மிதெக்) தடுப்பூசி மையத்திற்கு வருகை தந்த பின்னர், “நாங்கள் அவர்களுக்கு ஒரு தேர்வு கொடுத்தால், அது (தடுப்பூசி செயல்முறை) மெதுவாக்கிவிடும்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அந்த விருப்பம் வழங்கப்பட்டால், தடுப்பூசி எடுப்பதற்காக பலர் காத்திருக்கக் கூடும்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில், ஐந்து மெகா தடுப்பூசி மையங்களை (பிபிவி) உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.