தம்பதிகள் சந்திக்க மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதி இல்லை

முதல் கட்ட, முழு கதவடைப்பு காலகட்டத்தில், பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்திப்பதற்கான மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்கும் அனுமதி இல்லை என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ஜூன் 1 முதல், மாவட்டங்களுக்கு இடையிலான பணி அனுமதி கடிதங்களைச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மட்டுமே வழங்கும் என்றார் அவர்.

இஸ்மாயிலின் கூற்றுப்படி, மரணம் மற்றும் மோசமாக நோய்வாய்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தல் போன்ற அவசர நோக்கங்களுக்காக மட்டுமே காவல்துறை மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்கும் அனுமதி கடிதங்களை வழங்க முடியும்.

இதற்கிடையில், சுகாதாரச் சேவைகள், மருத்துவம் மற்றும் தினசரி தேவைகளைப் பெறுவதற்கான நடமாட்டங்களுக்கு 10 கி.மீ. சுற்றளவில் அல்லது குடியிருப்புக்கு அருகில் உள்ளவைகளுக்கு மட்டுமே அனுமதி என்று இஸ்மாயில் கூறினார்.

இரவு 8 மணி வரையில் மட்டுமே, ஜாகிங் மற்றும் தொடுதல் இல்லாத உடற்பயிற்சி நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.