அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) முதல், நடைமுறைக்கு ‘முழு கதவடைப்பு’-கான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று கோடிட்டுக் காட்டினார்.
இது பெரும்பாலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம், முதல் நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையில் (பி.கே.பி 1.0) செயல்படுத்தப்பட்டதை ஒத்திருக்கிறது.
இந்த ஒட்டுமொத்த கதவடைப்பு காலகட்டத்தில், அத்தியாவசியச் சேவைகளைத் தவிர்த்து, பெரும்பாலான பொருளாதார மற்றும் சமூகத் துறைகள் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் மக்களின் இயக்கமும் தடைசெய்யப்படும்.
“முழு கதவடைப்பு” எஸ்.ஓ.பி.க்கான பொதுவான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு :
1) ஒரு வீட்டிற்கு இரண்டு பேர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். வீட்டிலிருந்து மூன்றாவது நபர் மருத்துவ மற்றும் அவசர நோக்கங்களுக்காக மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்.
2) வீட்டை விட்டு வெளியேறுவது, வேலைக்காகவும் (அத்தியாவசிய சேவைகள்) உணவு, மருந்துகள் மற்றும் அடிப்படை தேவைகளை வாங்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
3) வாடகைக் கார்களில் ஒரு வாகனத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி.
4) 10 கி.மீ.க்கு மிகாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்தச் சுற்றளவில் கிடைக்காத மருத்துவச் சேவைகளைப் பெற வேண்டுமானால், ஒருவர் 10 கி.மீ. சுற்றளவைத் தாண்டி, அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லலாம்.
5) மெதுநடை மற்றும் தனிப்பட்ட உடற்பயிற்சி ஆகியவை அருகிலுள்ள இடங்களில் அனுமதிக்கப்படுகின்றன. 2 முதல் 3 மீட்டர் சமூக இடைவெளியுடன், உடல் தொடர்பு இல்லாமல்.
6) முனைமுகத் தொழிலாளர்கள் அல்லது பெற்றோர் இருவரும் வேலை செய்ய வேண்டியக் கட்டாயச் சூழலில், அவர்களின் குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும், தவிர மற்ற அனைத்து குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் மூடப்படும்.
7) பேரங்காடிகள் மூடப்படும், ஆனால் அத்தியாவசியச் சேவைகளாக பட்டியலிடப்பட்ட வாடகைத்தாரர்கள் தங்கள் வணிகங்களைத் திறந்திருக்கலாம்.
8) மசூதிகள் மற்றும் சூராவ்களில், அதன் செயற்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு மட்டுமே பிரார்த்தனைக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இது மாநில மத அதிகாரிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது, வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
9) பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும், ஆனால் 50 விழுக்காடு கொள்ளளவுடன்.
அத்தியாவசியச் சேவையாகக் கருதப்படும் அனைத்து வணிகங்களும், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
இருப்பினும், பின்வருவனவற்றின் வணிக நேரம் மாறுபடலாம் :
- சந்தை : காலை 6 மணி முதல் 2 மணி வரை.
- உழவர் சந்தை : காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை.
- மொத்த வியாபாரச் சந்தை : நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை
- பெட்ரோல் நிலையம் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை (நெடுஞ்சாலைகளில் இருப்பவை 24 மணிநேரமும் இயக்கலாம்)
கோவிட் -19 நேர்வுகள், ஜூன் 15-க்குள் 13,000-ஐ எட்டலாம் எனச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
எனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டபடி கடுமையான வடிவத்தில் பி.கே.பி. செயல்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
மறுபுறம், முழு நடமாட்டக் கட்டுப்பாடு எடுக்கப்படாவிட்டால், பொதுச் சுகாதார அமைப்பு முடங்குவதற்குச் சாத்தியமுண்டு என்று இஸ்மாயில் கூறினார்.
“தீவிரச் சிகிச்சை பிரிவுகள் (ஐ.சி.யூ) உள்ளிட்ட மருத்துவமனை வார்டுகள் / படுக்கைகளின் திறன் அதிகபட்ச நிலையை எட்டியுள்ள நிலையில், முழு கதவடைப்பு அமல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் தேசியச் சுகாதாரச் சேவை முறை முடங்கிவிடும்”.
“ஜூன் 1 முதல் 14 வரையில், இந்த இரண்டு வார காலம் மிகவும் முக்கியமானது, குறிப்பாக இந்தத் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் இருக்கும் சுகாதார அமைச்சுக்கு.
“சுய ஒழுக்கம் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே, நாட்டின் சுகாதார முறையைக் காப்பாற்ற முடியும், கோவிட் -19 நேர்வுகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாடு முடங்கிவிடும்,” என்று அவர் கூறினார்.