ஜூன் 1 முதல் வேலை பயணத்திற்கான மிட்டியின் அனுமதி கடிதம் இரத்து

சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி) வழங்கியப் பணிக்கான பயண அனுமதி கடிதம், ஜூன் 1 முதல் இரத்து செய்யப்படும்.

மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப், இனி அந்தந்த வேலை சம்பந்தப்பட்ட அமைச்சின் பயண அனுமதி கடிதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

“அவர்கள் விவசாயத் துறையில் பணிபுரிந்தால், வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சில் விண்ணப்பிக்க வேண்டும்.

“தொழிலாளர் இயக்க அனுமதி கடிதம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப், பொதுத் துறை அமைச்சர் (உள்கட்டமைப்பு) ஃபடில்லா யூசோப் தலைமை தாங்குவார்,” என்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் கலந்துகொண்டார்.

சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 60 விழுக்காட்டினர் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவதாக அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், தனியார் தொழிலாளர்கள் சில முதலாளிகளால் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த இஸ்மாயில் சப்ரி, அரச மலேசிய காவல்துறையும் மனிதவள அமைச்சும் இதனைக் கண்காணிக்கும் என்றார்.

“பிடிவாதமாக நடந்துகொள்ளும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அவர்களின் முதலாளிகள் மீறினால், ஊழியர்கள் உடனடியாக புகார் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பொருளாதாரத் துறையை மூடுவதோடு, தொழிலாளர்களின் எண்ணிக்கையை 15 மில்லியனிலிருந்து 1.5 மில்லியனாக கட்டுப்படுத்தி, அனைத்து தரப்பினரும் பிற உத்தரவுகளுக்கு இணங்கினால், தொற்று வளைவில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுவதாக அவர் சொன்னார்.

அதே நேரத்தில், கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெறும் வகையில், தனியார் துறையும் அரசாங்கத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

  • பெர்னாமா