மைசெஜாத்தெரா விண்ணப்பத்தில் தடுப்பூசிக்குப் பதிந்த சிலருக்கு, பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி இடங்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
கூகிள் மேப்ஸ் ஏபிஐ தொடர்பான சிக்கல்கள் காரணமாக இது நிகழ்ந்ததாக கைரி கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, மக்கள் தங்களின் வசிப்பிடத்திற்குள் நுழையும்போது, கூகிள் மேப்ஸ் எல்லா இடங்களையும் ஒரே பெயரில் பட்டியலிடும், மேலும் சில பயனர்கள் பட்டியலில் முதல் முகவரியைத் தேர்வு செய்யலாம், அது தவறான முகவரியாகக் கூட இருக்கலாம்.
“எடுத்துக்காட்டாக, அவர் கோலாலம்பூரில் உள்ள தாமான் பஹாகியாவில் வசிக்கிறார் என்று வைத்துகொள்வோம். அவர்கள் ‘தாமான் பஹாகியா’ என்று தட்டச்சு செய்யும்போது, அனைத்து (இடங்களும் பெயரிடப்பட்ட) ‘தாமான் பஹாகியா’வும் கூகிள் ஏபிஐயில் வெளிவரும்.
“அவர்கள் முதல் ‘தாமான் பஹாகியா’வைக் கிளிக் செய்தால் (பட்டியலில்) இறுதியாக அவர்களுக்குச் சண்டகானில் உள்ள ‘தாமான் பஹாகியா’ கிடைத்தது,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
எனவே, பதிவுசெய்பவர் தங்களது அஞ்சல் குறியீடு மற்றும் மாநிலத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும் வகையில் பதிவு செயல்முறை மேம்படுத்தப்படும் என்று கைரி கூறினார்.
“மைசெஜாத்தெரா பயனர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், அவர்களின் முகவரியைப் புதுப்பிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் குறைக்கப்படலாம் அல்லது மீண்டும் நடக்காது.
“தயவுசெய்து உங்கள் முகவரியைப் புதுப்பியுங்கள், அஞ்சல் குறியீடு மற்றும் முகவரியை இடுங்கள், இதனால் இந்தச் சிக்கல் மீண்டும் ஏற்படாது,” என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க, பயனர்களுக்கு உதவும் வகையில் ஒரு தொடர்பாடல் உதவி அம்சமும் பயன்பாட்டில் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.