உணவு விநியோகிப்பாளர்களுக்கு உரிய ஈபிஎஃப் பங்களிப்பு தேவை – மனு தொடங்கப்பட்டது

மற்ற ஊழியர்களைப் போலவே, கிரேப், ஃபூட் பண்டா போன்ற உணவு விநியோகிப்பாளர்களுக்கும் சொக்ஸோ மற்றும் ஈபிஎஃப் ஆகியப் பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்று அமானா இளைஞர் பிரிவு கோரிக்கை மனுவைத் தொடங்கியுள்ளது.

அதன் தலைவர், ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், இ-ஹெயிலிங் ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் வேலைவாய்ப்புச் சட்டம் 1955-இன் கீழ், சட்டபடி ஊழியர்களாக கருதப்படவில்லை, அதற்குப் பதிலாக சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக மட்டுமே அவர்கள் கூறப்படுகின்றனர்.

“அவர்கள் சாலையில் ஆபத்துக்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், வேலை உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

“[…] உணவு விநியோகிக்கும்போது விபத்து நடந்தால், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் யார் இழப்பீடு வழங்குவார்கள்? முதுமையில் அவர்களின் வாழ்க்கைக்கு வேறு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? இந்த மக்களுக்கு அவர்களின் சேவைகள் மிக முக்கியமானவை என்றாலும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவில் முழு கதவடைப்பு தொடங்கப்படுவதால், கிராப், ஃபுட்பண்டா மற்றும் பிற நிறுவனங்களில் உணவு விநியோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஷஸ்னி எதிர்பார்க்கிறார்.

ஈ-ஹேய்லிங் ஓட்டுநர்களையும் உணவு வழங்குநர்களையும் மற்ற ஊழியர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஆகஸ்ட் 2018 முதல், ஈபிஎஃப் மற்றும் கிராப் ஆகியவை ஐ-பெர்சாராஆன் திட்டத்தை உருவாக்கியது, அங்கு ஓட்டுநர்கள் தன்னார்வப் பங்களிப்பைச் செய்கிறார்கள், முதலாளிகள் அந்தத் தொகையில் ஐந்து விழுக்காட்டைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர்களுக்குப் பங்களிப்பார்கள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கும் கூடுதலாக.

சாதாரண முதலாளிகள், ஓர் ஊழியரின் மாதச் சம்பளத்தில் 13 விழுக்காட்டை வருடாந்திர வரம்பில்லாமல் பங்களிக்க வேண்டும் என்று ஷஸ்னி கூறினார்.

இது அநீதி என்று அவர் விவரித்தார், சட்டபடியான ஊழியர்களாக மட்டுமல்லாமல், வருடாந்திர விடுப்பு மற்றும் கூடுதல் நேர வேலைக்கான ஊதியம் போன்ற சலுகைகளும் கிடைக்க வேண்டும்.

“உணவு விநியோகஸ்தர்களுக்கும் மற்ற ஊழியர்களைப் போலவே சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.

“[…] பிரிட்டன் போன்ற பிற நாடுகள், ஏற்கனவே உணவு விநியோக நிறுவனங்களுக்குத் தங்கள் ஓட்டுநர்களைச் சுயாதீன ஒப்பந்தக்காரர்களைப் போல் அல்லாமல்,  ஊழியர்களைப் போலவே நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளன.

“… மற்ற துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக, இவர்களுக்கும் முறையான தொழிலாளர்கள் என்ற நிலையைக் கொடுக்க வேண்டும்.

“அந்த நோக்கத்திற்காக, நாங்கள் ஒரு மனுவைத் தொடங்கியுள்ளோம், இதன் மூலம் அவர்களின் தலைவிதியும் எதிர்காலமும் தொடர்ந்து பாதுகாக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.