RM40 பில்லியன் மதிப்பில் பெமெர்காசா பிளஸ் – பிரதமர் அறிவிப்பு

நாட்டில் தற்போது முழு கதவடைப்பு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியாகப், பிரதமர் முஹைதீன் யாசின் பெமெர்காசா தம்பஹான் அல்லது பெமெர்காசா பிளஸ் உதவித் திட்டத்தை அறிவித்தார்.

பெமெர்காசா பிளஸ் திட்டத்தின் மொத்த மதிப்பு RM40 பில்லியன் என்று முஹைடின் கூறினார், இதில் அரசாங்கத்தின் நேரடி நிதி RM5 பில்லியன் ஆகும்.

பெமெர்காசா பிளஸ் மூன்று முக்கியக் குறிக்கோள்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படும், அதாவது பொது சுகாதாரத் திறனை மேம்படுத்துதல்; மக்கள் மீதான அக்கறை செயற்பாட்டைத் தொடர்வது; மற்றும் வணிகத் தொடர்ச்சியை ஆதரிப்பது.

இன்றிரவு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு சிறப்பு செய்தியில் முஹைதீன் இதனைக் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்ள, மக்களுக்கு உதவும் வகையில் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ‘மக்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டத்தைத்’ (பெமெர்காசா) தொடர்ந்து, பெமெர்காசா பிளஸ் மற்றுமொரு பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பாகும்.

முன்னதாக, அரசாங்க வருமான நிதி RM11 பில்லியனுடன், பெமெர்காசா RM20 பில்லியன் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது.

முன்னதாக, 2020 மார்ச் மாதம், RM250 பில்லியன் மதிப்புள்ள ப்ரிஹாத்தின் ரக்யாட் பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பைத் (ப்ரிஹாடின்) தொடங்கி, ஐந்து உதவி தொகுதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது, அதன்பின்னர் ப்ரிஹாத்தின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் RM10 பில்லியன் அறிமுகம் கண்டது.

பொது சுகாதாரத்தை வலுப்படுத்த RM1 பில்லியன் ஒதுக்கீடு

இதற்கிடையில், பொது சுகாதாரத் திறனை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் RM1 பில்லியன் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக முஹைதீன் கூறினார்.

ஒதுக்கீடு அதிகரிப்பு என்பது, நாட்டின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையாமல், திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும் என்று முஹைதீன் கூறினார்.

கோவிட் -19 சிகிச்சைக்காக படுக்கைகள் மற்றும் தீவிரச் சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, RM450 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

“சுகாதார அமைச்சால் கண்காணிக்கப்படும் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், யுஐதிஎம், யுபிஎம் மற்றும் யுகேஎம் போன்றப் பொது பல்கலைக்கழகப் போதனா மருத்துவமனைகளுக்கும், சபா மற்றும் சரவாக் போன்ற ஏடிஎம் கள மருத்துவமனைகளுக்கும் இது ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில், அதிகரித்த இயக்க மற்றும் மேலாண்மை செலவுகள் உட்பட, கோவிட் -19 தொடர்பான பல்வேறு நிறுவனங்களின் செலவுத் தேவைகளை ஈடுகட்ட அரசாங்கம் RM550 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

இது தவிர, தற்போதுள்ள ஒப்பந்தங்களால் நியமிக்கப்பட்ட 14,000-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்களின் சேவை காலத்தை 2022 வரை நீட்டிக்க உள்ளதாக முஹைடின் கூறினார்.

“கூடுதலாக, இந்த ஆண்டு கட்டாய ஓய்வு பெறும் 500-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களை, ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கம் மீண்டும் நியமிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.