இன்று தொடங்கி, 14 நாள்கள் “முழு கதவடைப்பு” காலத்தில் செயல்பட விரும்பும் எந்தவொரு வணிகமும், சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சிலிருந்து (மிட்டி) விலக்கு பெறலாம் என்று முழு கதவடைப்பு அமலாக்கத்தின் கடைசி நிமிடத்தில் புத்ராஜெயா முடிவு செய்துள்ளது.
பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய முந்தின நிலவரப்படி, வணிகங்கள் முழு பி.கே.பி. அனுமதி கட்டுப்பாட்டாளர்களாகச் செயல்படும் அந்தந்தத் துறைகள் தொடர்புடைய அமைச்சுகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று புத்ராஜெயா கட்டளையிட்டது.
எடுத்துக்காட்டாக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டது, அனைத்து தகவல்தொடர்புகள், அஞ்சல் சேவைகள், தூதஞ்சல் (கூரியர்) சேவைகள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் (இயங்கலை ஊடக நிறுவனங்கள் உட்பட) அனுமதி வேண்டுமெனில் மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஓர் ஊழியர் ஓர் அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் ஒரு தொழிலில் இருப்பதை நிரூபிக்கும் ஒரு கடிதத்தை, அந்தந்தத் துறை அமைச்சுகளிலிருந்து பெற இது தேவைப்படுகிறது, இதன் மூலம் மாவட்ட எல்லை கடந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
எம்.கே.என்.-இன் கூற்றுப்படி, “முழு கதவடைப்பு” காலகட்டத்தில், வணிகங்கள் செயல்பட அனுமதிக்கும் கடிதங்களை வெளியிடுவதற்கான ஒரே ஒரு மையமாக மிட்டி செயல்படும்.
அப்படியிருந்தும், விண்ணப்பதாரர் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த, மிட்டி மற்ற அமைச்சுகளிலிருந்து விவரம் பெற வேண்டும் என்றும் எம்.கே.என். கூறியுள்ளது.
“இது சம்பந்தமாக, வேலைக்கானப் பயண அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களை மிட்டி ஒருங்கிணைத்த கோவிட் -19 நுண்ணறிவு மேலாண்மை அமைப்பு (சி.ஐ.எம்.எஸ்.) 3.0 தளத்தின் மூலம் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட 17 அத்தியாவசியச் சேவை துறைகளை ஒழுங்குபடுத்தும் அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கி இது செயல்படும்,” என்றது எம்.கே.என்.
முழு கதவடைப்பின் போது, தொடர்ந்து செயல்பட 17 துறைகள் அனுமதிக்கப்படுகின்றன – கடைசி நேர மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால்.
செயல்பட அனுமதிக்கப்பட்ட 17 துறைகளின் பட்டியலில் உணவு மற்றும் பானங்கள், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட சுகாதாரச் சேவைகள் மற்றும் நலன்புரி உள்ளிட்ட பாதுகாப்பு சேவைகள் அடங்கும்.
அத்துறைகள் பின்வருமாறு :-
- உணவு மற்றும் பானங்கள் – விலங்குகள் உட்பட
- ஆரோக்கிய உணவுப் பொருட்கள், விலங்கு பராமரிப்பு மற்றும் கிளினிக்குகள் மற்றும் கால்நடை சேவைகள் உள்ளிட்ட சுகாதார மற்றும் மருத்துவப் பராமரிப்பு
- நீர்
- ஆற்றல்
- பாதுகாப்பு மற்றும் தற்காப்பு, அவசரநிலை, நலன்புரி மற்றும் மனிதாபிமான உதவி
- திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்தம் மற்றும் கழிவுநீர்
- நிலம், நீர் அல்லது காற்று வழியான போக்குவரத்து
- துறைமுகம், கப்பல் தளம் மற்றும் விமான நிலையச் சேவைகளும் செயல்பாடுகளும்
- ஊடகங்கள், தொலைத்தொடர்பு மற்றும் இணையம், தபால் மற்றும் தூதஞ்சல் மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்தொடர்புகள்.
- வங்கி, காப்பீடு, தக்காஃபுல் மற்றும் மூலதன சந்தைகள்
- சமூகக் கடன் (அடமானம் மற்றும் அர்-ரஹ்னு)
- மின் வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- எரிபொருள்கள் மற்றும் மசகு எண்ணெய் உற்பத்தி, வடிகட்டுதல், சேமித்தல், வழங்கல் மற்றும் விநியோகம்
- ஹோட்டல் மற்றும் தங்குமிடம் (தனிமைப்படுத்துதல் நோக்கங்களுக்காக மட்டுமே, சுற்றுலா நோக்கங்களுக்காக அல்ல)
- முக்கியமான கட்டுமானம், பராமரிப்பு மற்றும் பழுது
- வனவியல் சேவைகள் (அமலாக்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவை) மற்றும் வனவிலங்குகள்
- அத்தியாவசியச் சேவைகள் வழங்குவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட தளவாடங்கள்
“முழு கதவடைப்பு” காலகட்டத்தில் 60 விழுக்காடு தொழிலாளர்களுடன் செயல்பட 12 வகையான தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படுகின்றன:
- விண்வெளி – பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு (எம்.ஆர்.ஓ);
- உணவு மற்றும் பானங்கள்;
- பொட்டலமிடுதல் மற்றும் அச்சிடும் பொருட்கள்;
- உடல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் துப்புரவு உபகரணங்கள்;
- உடல்நலம் மற்றும் மருத்துவப் பராமரிப்பு பொருள்கள், இரப்பர் கையுறைகள் மற்றும் தீ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ);
- மருத்துவ உபகரணப் பொருள்கள்;
- மின் மற்றும் மின்னணுவியல்;
- எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் உட்பட;
- இரசாயனப் பொருட்கள்;
- இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்;
- பிபிஇ தயாரிப்பதற்கான ஜவுளி; மற்றும்,
- எரிபொருள்கள் மற்றும் மசகு எண்ணெய் உற்பத்தி, வடிகட்டுதல், சேமித்தல், வழங்கல் மற்றும் விநியோகம்.
மேலும், வாகனங்கள் மற்றும் அதன் பொருள்கள்; இரும்பு மற்றும் எஃகு; சிமென்ட்; கண்ணாடி; மற்றும் மட்பாண்டங்கள் ஆகிய ஐந்து வகை தொழில்துறைகள் 10 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.