நேற்றிரவு அறிவிக்கப்பட்ட, மக்களை மேம்படுத்துதல் மற்றும் கூடுதல் பொருளாதாரத் திட்டத்தின் (பெமெர்காசா பிளஸ்) மூலம் மக்கள் பராமரிப்பு உதவி (பிரிஹாத்தின் ரக்யாட்-பிபிஆர்) திட்டத்தின் வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் RM2.1 பில்லியனை ஒதுக்கியுள்ளது.
பிரதமர் முஹைதீன் யாசின், RM2,500-க்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பத்தினர் RM500-ஐப் பெறுவர் என்றும், RM2,501 முதல் RM5,000 வரை சம்பாதிக்கும் குடும்பத்தினர் RM300-ஐப் பெறுவர் என்றும் கூறினார்.
திருமணம் ஆகாதவர்ளுக்கு, ஜூன் மாத இறுதியில், அவரவர் வங்கிக் கணக்குகளில் RM100 வரவு வைக்கப்படும்.
“இந்தக் கட்டணம், செப்டம்பர் மாதத்தில் பிபிஆர் கடைசி கட்டணத்தில் கூடுதலாக RM2.4 பில்லியன் ஆகும்,” என்று அவர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட சிறப்பு செய்தியில் கூறினார்.
இது தவிர, தேசிய வங்கி (பி.என்.எம்) உடனான கலந்துரையாடலின் விளைவாக, ஜூன் மாதத்தில் கடன் உதவிகளையும் கடன் ஒத்திவைப்பையும் வழங்க வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளன என்று அவர் சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில், செயல்பட அனுமதிக்கப்படாத பி40 குழுவினர் மற்றும் வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ) இந்த உதவிகளைப் பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்றார் பிரதமர்.
மூன்று மாதங்களுக்குத் தானாகவே தடைக்காலத்தின் ஒப்புதலைப் பெற அவர்கள் தேர்வு செய்யலாம் அல்லது ஆறு மாதக் காலப்பகுதியில் 50 விழுக்காடு தவணைகளில் திருப்பிச் செலுத்துவதைக் குறைக்கலாம் என்று முஹைதீன் கூறினார்.
இந்த முயற்சி ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கடன் வாங்கியவர்களுக்கு, RM30 பில்லியன் மதிப்பிலான உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“வங்கித் தொழில்துறை, இந்த விஷயத்தில் நாளை முதல் விரிவான தகவல்களை வழங்கும். இந்தத் தானியங்கி தடையை அறிவிப்பது வங்கி நிறுவனங்களின் கடன் வாங்குபவர்களுக்குச் சிறிது நிம்மதியை அளிக்கும் என்று நம்புகிறேன்.
“கடன் பெறுபவர்கள் இந்த உதவியின் பயனாக அந்தந்த வங்கிகளை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இது தவிர, பேருந்து மற்றும் வாடகை கார் கொள்முதல் மறுவாழ்வு திட்டத்தை, இந்த வாரம் RM1 பில்லியன் ஒதுக்கீட்டில் அரசாங்கம் தொடங்கும் என்றும் முஹைதீன் கூறினார்.
இத்திட்டத்தின் மூலம், தகுதியான பேருந்து மற்றும் வாடகை கார் உரிமையாளர்கள் 12 மாதங்கள் வரை கடன் ஒத்துவைப்பு பெறலாம் மற்றும் கடன் செலுத்தும் காலத்தை 36 மாதங்கள் வரை நீட்டிக்கலாம் என்றார் அவர்.
அரசாங்க நிறுவனங்களும் கடன் ஒத்திவைப்பையும் வணிக வளாகங்களுக்கு வாடகை தள்ளுபடியையும் வழங்க வேண்டும் என்றும் முஹைதீன் பரிந்துரைத்தார்.
“மாரா பிரிஹாத்தின் பீஸ் ஆஃப் மைண்ட் (Mara Prihatin Peace of Mind) திட்டத்தை 2021 ஜூலை 31 வரை திறந்து வைக்கும். கடன் வாங்கியவர்கள் கல்வி கடன் திருப்பிச் செலுத்துதல் அல்லது கடன் ஒத்துவைப்பு செய்ய இயங்கலையில் விண்ணப்பிக்கலாம்,” என்று அவர் கூறினார்.
பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாரா தொழில்முனைவோருக்கு, 2021 மே முதல் ஜூலை வரை வணிக வளாகங்களுக்கு வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும், என்றார்.
- பெர்னாமா