அரசு ஊழியர்கள் RM30 மில்லியன் பங்களிப்பார்கள் – ஸூகி அலி

இந்த ஜூன் முதல், அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் மூன்று மாதங்களுக்குச் சம்பளம் எடுக்க மாட்டார்கள் என்ற பிரதமர் முஹைதீன் யாசின் அறிவிப்புக்கு இணங்க, அரசாங்கத் தலைமைச் செயலாளர் மொஹமட் ஸூகி அலி, பேரழிவு அறக்கட்டளை கணக்கில் அரசு ஊழியர்களும் சுமார் 30 மில்லியன் ரிங்கிட் பங்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.

முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், நிலையான பொழுதுபோக்குக் கொடுப்பனவு (ஐ.டி.கே) மற்றும் பொது சேவை நிலையான கொடுப்பனவு (ஐ.தி.கே.ஏ) ஆகியவற்றிலிருந்து, கிட்டத்தட்ட அனைத்து தரப்புகளையும் சேர்ந்த 800,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களிடமிருந்து நன்கொடைகள் வரும் என்று ஸூகி கூறினார்.

இது மூன்று மாதங்களுக்குச் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“இது அரசு ஊழியர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடாக, பேரிடர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

“800,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களிடமிருந்து (முனைமுகத் தொழிலாளர்கள் மற்றும் தரம் 1 முதல் தரம் 28 அரசு ஊழியர்கள் தவிர) பெறப்படும் இந்தப் பங்களிப்பு RM30 மில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் சொன்னார்.

சேவையின் தரத்தின் அடிப்படையில் பங்களிப்பு நிர்ணயிக்கப்படும் என்றும், அது குறித்த விவரங்கள் தொடர்பான ஒரு சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று ஸூகி கூறினார்.