தனியார் மருத்துவரின் சேவைகளைப் பயன்படுத்தக் கைரிக்கு ஆர்வம் இல்லை – எம்.எம்.ஏ.

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்- PICK) இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில், தனியார் மருத்துவர்களை ஈடுபடுத்த அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் மற்றும் அவர்களிடையே எந்தவிதமான உடன்பாடும் இதுவரை இல்லை என்று மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ) தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் முனியாண்டி தெரிவித்தார்.

பிக்’கில் தனியார் மருத்துவர்களையும் இணைத்து பணியாற்றும் தங்கள் விருப்பம் குறித்து கலந்துரையாட, கடந்த மார்ச் 2-ம் தேதி கைரிக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார், ஆனால் அதற்கு இதுவரை பதில் இல்லை.

“கோவிட் -19 தடுப்பூசி அணுகல் உத்தரவாதச் சிறப்புக் குழுவிலிருந்து (ஜே.கே.ஜே.வி.) இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பு இல்லை.

“பொது மருத்துவர்களை (ஜி.பி.) ஈடுபடுத்துவதில் அமைச்சர் அக்கறை காட்டவில்லை,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சுப்பிரமணியம், இந்தத் திட்டத்தில் ஏன் 2,500 பொது மருத்துவர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

“சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழுதியபோது எங்களைச் சந்திக்க அமைச்சர் இசைந்திருக்க வேண்டும்.

“இது அதிக ஜி.பி.க்களை இத்திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கும். நிச்சயமாக, எம்.எம்.ஏ. திட்டத்தில் அமைச்சர் ஆர்வம் காட்டியிருந்தால் நிலைமை வேறுபட்டிருக்கும்,” என்று அவர் கூறினார்.

பிக் ஒருங்கிணைப்பு அமைச்சர் என்ற வகையில், குறிப்பிட்ட சில நேரங்களில், இயங்கலையில் ஊடகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அவரால், நாட்டில் இருக்கும் சுமார் 8,000 ஜி.பி.க்களுடன் அதே முறையில் ஓர் அமர்வை நடத்த முடியவில்லை என்றும் சுப்பிரமணியம் சொன்னார்.

ஒரு நாளைக்கு 75,000ஐ- அடையலாம்

அது நடந்திருந்தால், கோவிட் -19 அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாட்டின் தற்போதைய நிலைமை இப்போது வேறுபட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

“கோவிட் -19 தினசரி நேர்வுகளும் இறப்புகளும் அதிகரித்தபோதுதான் ஜி.பி.க்கள் பற்றிய விவாதம் நடந்துள்ளது.

“சில மாதங்களுக்கு முன்பு மலேசியச் சுகாதார அமைச்சும் ஜே.கே.ஜே.வி.யும் எங்கே இருந்தன? அல்லது விஷயங்கள் மோசமடையும் வரை காத்திருந்து, பின்பு செயல்படும் பாரம்பரியத்துடன் நாம் தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகிறோமா?” என்று அவர் கேள்விகள் எழுப்பினார்.

சுப்பிரமணியத்தின் கூற்றுப்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில், 2,500 தனியார் மருத்துவர்களில் பெரும்பாலானோர் இதற்கானப் பயிற்சி பெற்று, கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தை மே மாதத் தொடக்கத்தில் தொடங்கத் தயாராக இருந்தனர் – இது பிக் திட்டம் தொடங்க இலக்கு வைக்கப்பட்ட காலகட்டம்.

சம்பந்தப்பட்ட ஜி.பி.க்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் முடிவுக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.

“பிக் ஒருங்கிணைப்பு அமைச்சருக்கு இதுபற்றி தெரியுமா? அவருக்குத் தெரிந்திருந்தால், ஏன் தாமதம்?

“2,500 ஜி.பி.க்களின் ஈடுபாட்டுடன் கூட, ஒவ்வொரு நாளும் 75,000 தடுப்பூசிகள் போடப்படலாம்.

“இது பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் இதை நன்கு அறிவார் என்று நான் நம்புகிறேன்.

“அவர் உண்மையிலேயே அறிந்தவராக இருந்தால், இந்த நோய்த்தடுப்புத் திட்டத்தின் பொறுப்பான அமைச்சராக, அவர் அந்தத் திட்டத்தைச் சரியாகச் செய்ய இரவும் பகலும் தனியார் மருத்துவர்களை வலியுறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தனியார் மருத்துவர்களும், சுகாதார அமைச்சால் பயிற்சி பெற்றவர்கள் என்று சுப்பிரமணியம் கூறினார்.