மே 31-ம் தேதி, கோத்த கினாபாலு விமானத் தகவல் பிராந்தியத்தில் (எஃப்.ஐ.ஆர்) நுழைந்த சீன மக்கள் குடியரசு விமானப்படையின் (பி.எல்.ஏ.ஏ.எஃப்) 16 விமானங்கள் தொடர்பான விவகாரத்தில், இரு தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தெரிவித்தது.
ஒரு கூட்டு அறிக்கையில், சீனாவிடமிருந்து நியாயமான விளக்கம் பெற மலேசியாவுக்கு உரிமை உண்டு என்று பிஎச் தலைமை மன்றம் கூறியது.
கோத்த கினாபாலு எஃப்.ஐ.ஆர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்புகொள்வதற்கான அறிவுறுத்தல்களுக்கு இணங்க மறுத்த அந்த விமானங்களின் நடவடிக்கைகள் வான்வெளியின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக இருப்பதோடு, நம்பத்தகுந்ததாகவும் இல்லை என்றது அது.
“மலேசியக் கடல் மண்டலத்திலிருந்து 60 கடல் மைல் தொலைவில், ஒரு வெளிநாட்டு விமானம் தந்திரோபாய உருவாக்கத்தில் பறப்பது கண்டறியப்பட்டால், இந்த நடவடிக்கை சந்தேகத்திற்குரியது; “சர்வதேச ஒழுங்கு விதிகளின் அடிப்படையில்” ஏற்புடையது அல்ல.
“பிஎச் இந்தச் சம்பவத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, மேலும் சீனாவிடமிருந்து நியாயமான விளக்கம் பெற மலேசியாவின் உரிமையை வலியுறுத்துகிறது,” என்று அது கூறியுள்ளது.
இந்த அறிக்கையைப் பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
முன்னதாக, மலேசியாவில் உள்ள சீனத் தூதரகம், விமானங்கள் வழக்கமான பயிற்சிக்கு உட்பட்டதாகவும், இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டத்திற்கு இணங்கியுள்ளதாகவும் கூறியது.
இருப்பினும், பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை, இந்த விமானங்களின் படையெடுப்பைக் கண்டித்தது, அவ்விமானங்கள் தைவானிய வான்வெளியிலும் பறந்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே, இந்த விவகாரம் குறித்து இருதரப்பும் அதிகாரப்பூர்வ மாநாட்டை ஆயுதப்படைகளின் தளபதியுடனும் விமானப்படைத் தளபதியுடனும் பாதுகாப்பு அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிஎச் வலியுறுத்தியது.