ஃபாஹ்மி : 8.6 விழுக்காடு மடிக்கணினிகள் விநியோகம் – தோல்வி நிலையில் ரட்ஸி

அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி, 150,000 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்குவது சுமூகமாக நகர்வதாகத் தெரியவில்லை; ஆறாவது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் 13,000-க்கும் குறைவானவையே விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாஹ்மி ஃபட்ஸில் கூறுகையில், கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடினின் விநியோக விகிதம் 8.6 விழுக்காடானது, தேர்வு தரங்களின் அடிப்படையில் தோல்வியுற்றதாக கருதப்படும் என்றார்.

ஏப்ரல் மாதப் பிற்பகுதியில், செர்டிக் திட்டம் சுமார் 13,000 சாதனங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறியது, அதே நேரத்தில் பெர்னாமா ராட்ஸியை மேற்கோள் காட்டி 13,000-க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, மே மாத இறுதிக்குள், மேலும் 50,000 மாணவர்களுக்கு சாதனத்தை விநியோகிப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக செர்டிக் திட்டம் தெரிவித்தது.

இருப்பினும், இன்று தனது செய்தியாளர் சந்திப்பின் போது, ​​95 பள்ளிகளுக்கு மொத்தம் 12,887 மடிக்கணினிகளும் வரைபட்டிகைகளும் அனுப்பப்பட்டுள்ளதாக ராட்ஸி தெரிவித்தார்.

ஜூன் 12-க்குள், மேலும் 40,290 சாதனங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும், மீதமுள்ள 96,823 மடிக்கணினிகளும் வரைபட்டிகைகளும் செப்டம்பர் மாதத்தில் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்தக் காலக்கெடுவை அமைச்சு கடைப்பிடிக்குமா என்று ஃபாஹ்மி சந்தேகம் தெரிவித்தார்.

செர்டிக் திட்டத்தின் விநியோக வழிமுறையை, ராட்ஸியும் கல்வி அமைச்சும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

“இல்லையென்றால், ராட்ஸி இராஜினாமா செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பள்ளிகள் இப்போது ஜூன் 14 வரை தவணை விடுமுறையில் உள்ளன.

 

அதன் பிறகு, அடுத்த பள்ளி விடுமுறை வரை, 25 நாட்களுக்கு இயங்கலையில் வகுப்புகள் மீண்டும் செயல்படும்.

இருப்பினும், பல மாணவர்கள் இந்த இயங்கலை வகுப்புகளில் கலந்துகொள்வது கடினம்.

கடந்த பிப்ரவரியில், உத்துசான் மலேசியா அறிக்கை ஒன்று, 1.85 மில்லியன் மாணவர்களுக்கு அல்லது 36.9 விழுக்காட்டினருக்கு இயங்கலை வகுப்புகள் எடுப்பதற்கான கருவிகள் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்ததாகத் தெரிவித்தது.

“150,000 சாதனங்கள் (செர்டிக் திட்டத்தின் கீழ்) சுமார் 10 விழுக்காட்டை மட்டுமே உள்ளடக்கும்,” என்று ஃபாஹ்மி கூறினார்.