உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்கள், மைசெஜாத்தெரா பயன்பாட்டில் தங்கள் உடல்நிலையைப் புதுப்பிக்கத் தவறினால் தண்டம் விதிக்கப்படலாம்.
கூடுதலாக, அவர்கள் பணிபுரியும் இடத்தில் நுழைய மைசெஜாத்தெரா பயன்பாட்டையும் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
பேராக்கில், அவர்களின் சுகாதார நிலையைப் புதுப்பிக்க தவறியதற்காக, 31 தொழிலாளர்களுக்கு முறையே RM1,500 முதல் RM2,000 வரை தண்டம் விதிக்கப்பட்டதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.
தண்டம் விதிக்கப்பட்டவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் 29 தொழிலாளர்களும் ஒரு கோழி தொழிற்சாலையைச் சேர்ந்த இருவரும் ஆவர் என்று மஞ்சோங் காவல்துறைத் தலைவர் நோர் ஒமர் சப்பி கூறினார்.
இந்நடவடிக்கை, பொதுமக்களின் உடல்நிலையைப் புதுப்பிக்காததால், அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்படுமா என்பது குறித்து பல கேள்விகளை மஞ்சோங் காவல்துறையினரின் முகநூல் பக்கத்தில் சமர்ப்பிக்க தூண்டியது.
அக்கேள்விகளுக்குப் பதிலளித்த மஞ்சோங் போலீசார், உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
“இந்த எஸ்.ஓ.பி., உற்பத்தி துறை சார்ந்த எஸ்.ஓ.பி.க்களைக் குறிக்கின்றது, பொது எஸ்.ஓ.பி. அல்ல,” என்று அவர் கூறினார்.
மைசெஜாத்தெரா பயன்பாட்டில் உள்ள “கோவிட் -19 நிலை” பொத்தானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் உங்கள் உடல்நிலையைப் புதுப்பிக்கலாம்.
கோவிட் -19 தொற்றின் அறிகுறிகளை அவர்கள் அனுபவிக்கிறார்களா, அவர்கள் வெளிநாடு சென்றுள்ளார்களா, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் எவருடனும் அவர்களுக்குத் தொடர்பு உண்டா போன்ற கேள்விகள் நுகர்வோரிடம் கேட்கப்படும்.