மலேசியாவில், கோவிட் -19 நோய்த்தொற்று விகிதம், ஏப்ரல் மாதத்திலிருந்து முதல் முறையாக 1.0 மட்டத்திற்குக் கீழே குறைந்தது.
கடந்த வாரத்தில் தொற்று வீதம் படிப்படியாகக் குறைந்து வருவது, தொற்றுநோய் பரவுதல் வீதம் குறைந்து வருவதைக் குறிக்கிறது.
சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நேற்றைய தொற்று விகிதம் 0.99 ஆக இருந்தது.
கடைசியாக தொற்று விகிதம் 1.0-க்குக் கீழே இருந்தது ஏப்ரல் 7-ம் தேதி. மே 23-ம் தேதியன்று 1.21 என மிக உயர்ந்த விகிதத்தை எட்டிய அது, மே 30 முதல் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
1.0-க்கு மேல் நீடித்த தொற்று வீதம் என்றால், புதிய நேர்வுகள் விரைவாக அதிகரிக்கும், அதே நேரத்தில் 1.0-க்குக் கீழே உள்ள விகிதம் புதிய நேர்வுகள் குறையத் தொடங்குகின்றன எனப் பொருள்படும்.
கடந்த வாரம் 6,000 முதல் 8,000 நேர்வுகள் வரை தினசரி புதிய நேர்வுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்த எண்ணிக்கை குறைவதைக் காண, தொற்று விகிதம் அடுத்த சில வாரங்களுக்கு 1.0-க்குக் கீழே வைக்கப்பட வேண்டும்.
ஜூன் 1 முதல், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ.) கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது, ஆனால் கடந்த வாரத்தில் இந்த அதிகரிப்பு குறைந்துள்ளது.
கடந்த வாரம் ஐ.சி.யு.வில் மேலும் 44 நோயாளிகள் சிகிச்சை பெறத் தொடங்கினர், எனவே நேற்றைய நிலவரப்படி 890 நோயாளிகளுக்கு இந்தப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முந்தைய வாரத்தில் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெறத் தொடங்கிய 165 புதிய நோயாளிகளுடன் ஒப்பிடும்போது அந்த விகிதம் குறைவாக உள்ளது.
இருப்பினும், ஐ.சி.யு.வில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இருப்பதால் அடுத்த வாரம் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த வாரத்தில், மூன்று நாட்களுக்கு ஒரு நாளில் 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை நாடு கண்டது.
அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஜூன் 2-ம் தேதி நிகழ்ந்தது, அன்றைய தினம் 126 பேர் உயிரிழந்தனர்.