சுகாதார நிலையைப் புதுப்பிக்காததற்காக தண்டம் – இரத்து செய்ய எம்கேஎன் உத்தரவு

மைசெஜாத்தெரா விண்ணப்பத்தில் தங்கள் சுகாதார நிலையைப் புதுப்பிக்கவில்லை எனக் கூறி 31 தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்களை இரத்து செய்யுமாறு தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) உத்தரவிட்டுள்ளது.

எம்கேஎன் தலைமை இயக்குநர் மொஹமட் ராபின் பசீர் கூறுகையில், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அல்லது கோவிட் -19 நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே அவர்களின் உடல்நிலையை மைசெஜாத்தெரா-இல் புதுப்பிக்க வேண்டும்.

“மஞ்சோங் மாவட்டச் சுகாதாரத் துறை அந்தத் தண்டத்தை இரத்து செய்ய, மாவட்டக் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,” என்று அவர் மேற்கோளிட்டுள்ளதாக சின் சியு டெய்லி கூறியது.

இது தொடர்பாக, மேலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், ஙே கூ ஹாம், இந்த வழக்கிற்கான எஸ்ஓபியைக் காவல்துறை தவறாகப் புரிந்து கொண்டதாக ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சின் இயக்குநரின் வழிகாட்டுதலின் படி, மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலம், தினசரி அடிப்படையில் சுகாதார நிலையைத் தெரிவிக்க வேண்டியத் தேவை, கோவிட் -19 நேர்மறை வழக்குகளைக் கொண்ட உற்பத்திதுறை ஊழியர்களுக்கு அல்லது நேர்மறை வழக்குகளுடன் உடல் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஙே சொன்னார்.

“சுகாதாரத் தலைமை இயக்குநரின் அறிவுறுத்தல்கள் வர்த்தமானி செய்யப்படவில்லை என்பதை அமலாக்க அதிகாரிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே, அவரது அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் அறிந்திருப்பதாகக் கருத முடியாது.

“சுகாதாரத் தலைமை இயக்குநரின் அறிவுறுத்தல்கள் அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும், அதன் பிறகே சம்பந்தப்பட்ட தரப்பினர் அவரது அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால் அவர்களுக்குத் தண்டம் விதிக்கலாம் அல்லது அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும்,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இலவச சட்ட உதவியை வழங்க தனது தரப்பு தயாராக இருப்பதாக ஙே மேலும் சொன்னார்.