தினசரி மளிகை கடைகளிலும் பல்பொருள் அங்காடி கடைகளிலும் உள்ள அனைத்து பொருட்களையும் விற்கலாம் என்று தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) தெளிவுபடுத்தியது.
கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த, ஜூன் 1-ஆம் தேதி தொடங்கிய முழு கதவடைப்பின் போது, தண்டம் விதிக்கப்படும் என்ற அச்சத்தில் இத்தகைய வணிக உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் ஒரு பிரிவை மூடியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.
உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு, அதன் எஸ்ஓபி நடைமுறையில், கடைகள் “அத்தியாவசியமற்ற” பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளது, அதனால் ஒரு தவறான புரிதல் எழுத்துள்ளது என எம்.கே.என். கூறுகிறது.
சின் சியு டெய்லிக்கு அளித்த பேட்டியில், எம்கேஎன் தலைமை இயக்குநர் மொஹமட் ராபின் பசீர், கடையில் உள்ள அனைத்து பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு விற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
“மளிகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அவற்றின் வளாகத்தில் உள்ள பொருட்களை விற்க அனுமதிக்கிறோம், அது ஒரு பிரச்சனையல்ல,” என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பும், இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்துவார் என்றும் ராபின் மேலும் கூறினார்.
“அத்தியாவசியமற்ற” பிரிவுகளை மூடாததற்காக, தண்டம் விதிக்கப்பட்ட கடைகள், அந்தந்த வழக்குகளின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நாந்தா லிங்கியைத் தொடர்பு கொண்டபோது, எம்கேஎன்-இன் முடிவுக்குத் தனது அமைச்சு கட்டுப்படும் என்று கூறினார்.
கடைகளில் நெரிசலைத் தடுக்கும் நோக்கில், முந்தைய விதிகள் அமல்படுத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், எஸ்ஓபி-க்கள் தொடர்பாக, “மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பு” எம்கேஎன் என்றும், எனவே அவரது அமைச்சு எம்கேஎன் நிர்ணயிக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.