சினி ஏரியில் சுரங்கம் தோண்டுவதை நிறுத்துக – சுற்றுச்சூழல் என்ஜிஓ பஹாங்கிற்கு வலியுறுத்து

மலேசியாவின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியான தாசிக் சினி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பஹாங் அரசாங்கத்தை மலேசிய இயற்கை தோழர்கள் (சஹாபாட் ஆலம் மலேசியா – எஸ்.ஏ.எம்.) எனும் சுற்றுச்சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வலியுறுத்தியது.

எஸ்.ஏ.எம். தலைவர் மீனாட்சி இராமன், மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மட்டுமே சினி ஏரியை அதன் சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்றார்.

“செய்ய வேண்டிய மற்ற உடனடி நடவடிக்கைகளில், சினி ஏரியின் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கும் சிறிய அணைகள் இடிக்கப்பட வேண்டும்.

“அடுத்ததாக, முழு சினி ஏரியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக இருப்பதால், அவற்றைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக வர்த்தமானி செய்யுமாறு எஸ்ஏஎம் மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசு உறுதியளிக்கவில்லை என்றால், சினி ஏரியை ஓர் உயிரினக் கோளம் என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), கடந்த 2009, மே மாதம் அறிவித்ததைத் திரும்பப் பெறக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது என்றார் மீனாட்சி.

தாசிக் சினியில் நீர் தர நிலை இன்னும் சுத்தமாகவும், அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பஹாங் மாநிலச் சுற்றுச்சூழல் துறை நேற்று அறிவித்தது.

தாசிக் சினி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது, சுரங்க நடவடிக்கைகள் காரணமாக அச்சுறுத்தப்படுவதாகக் கூறப்படும் ஏரியின் ‘சமீபத்திய’ நிலை குறித்த ஒரு படமும் வெளியிடப்பட்டது. மேலும், இது பெக்கான் எம்.பி. நஜிப் ரசாக் உள்ளிட்ட சமூகத்திலிருந்து பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது, இது ஒரு பழைய படம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என நஜிப் கூறினார்.

-பெர்னாமா