முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட், இன்னும் நாட்டை நிர்வகிக்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது, பிறகு ஏன் அவர் முன்னர் இராஜினாமா செய்தாரென தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லி காங் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, மகாதீர் 1969-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது போல, தேசியச் செயல்பாட்டு மன்றப் (மாகேரன்) பாணியில் ஓர் அரசாங்கத்தை நிறுவ, மாமன்னரைச் சந்தித்தபோது முன்மொழிந்ததாகத் தெரிவித்தார்.
மாகேரனை யார் வழிநடத்துவார்கள் என்றப் பிரச்சினை விவாதிக்கப்படவில்லை, ஆனால் அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டால் உதவி வழங்க தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, பெர்சத்து பக்காத்தான் ஹராப்பானை (பி.எச்) விட்டு வெளியேற முடிவு செய்ததை அடுத்து மகாதீர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நஜிப் : ‘மாட்டு தொழுவத்தில் வைக்கவும்’
அமானா தலைவர் மொஹமட் சாபு தனது கீச்சகம் மூலம், கோவிட் -19 தொற்றைச் சமாளிக்க தவறிவிட்ட அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதே எதிர்க்கட்சியின் தற்போதைய போராட்டம் என்று கூறினார்.
“அவசரநிலை, கோவிட் -19 நோய்தொற்றைக் கையாள தவறிவிட்டது மற்றும் ஜனநாயக அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே நமது போராட்டமாகும்.
“அவசரநிலை 2-ன் (மாகேரன்) தேவை என்ன,” என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு கேட்டார்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முகநூலில், கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் மகாதீரின் நடவடிக்கைகளை கேலிச் செய்து நினைவு கூர்ந்தார்.
கோவிட் மலேசியாவிற்குப் பரவுவதைத் தடுக்க, சீனாவிலிருந்து வரும் பயணிகளை அரசாங்கம் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று நஜிப் பரிந்துரைத்தார்.
“பிரதமர் 4/7/7i மற்றும் எதிர்காலப் பிரதமர்9i (சுய-முன்மொழிவு) பதில் : மலேசியாவில் கோவிட்டின் நிலைமை இன்னும் சிக்கலானதாக இல்லாததால் தடுக்க வேண்டிய அவசியமில்லை.
“நீங்கள் அவர்களைத் தனிமைப்படுத்த முடியாது, ஏனென்றால் அவர்களை எங்கே வைக்க முடியும்?
“ஒரு மாட்டுத் தொழுவத்தில்தான் வைக்க வேண்டும்,” என்று நஜிப் தனது முகநூல் பதிவில் குறுப்பிட்டுள்ளார்.