முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது முன்மொழிந்த 1969-ஆம் ஆண்டு போல, தேசிய செயல்பாட்டு மன்றம் (மாகேரன்) அமைக்கும் திட்டத்தைப் பி.எச். நிராகரித்தது.
மறுபுறம், அவசரகால அமலாக்கத்தை நிறுத்தவும், நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவும் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் அழைப்பு விடுத்தது.
“நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு கட்சியாக, அவசரநிலை உடனடியாக முடிவுக்கு வரப்பட வேண்டும், நாடாளுமன்றம் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்ற எங்கள் நிலையான நிலைப்பாட்டின் அடிப்படையில் மாகேரன் முன்மொழிவை பி.எச். நிராகரிக்கிறது.
“கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு, பொருளாதாரம் மற்றும் அரசியலும்கூட சிறப்பாக செயல்பட ஜனநாயகம் தேவை, மக்களின் குரலைச் செவிமடுத்து தீர்வுகாண சிறந்த இடம் நாடாளுமன்றம்,” என்று பி.எச். தலைமை மன்றம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா தலைவர் மொஹமட் சாபு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இஸ்தானா நெகாராவில், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை எதிர்கொண்டபோது தான் மாகேரன் திட்டத்தை எழுப்பியதாக நேற்று மகாதீர் தெரிவித்தார்.
“அகோங் `வேண்டாம்` என்று சொல்லவில்லை, ஆனால் மாகேரன் உருவாவதற்கான திட்டம் அரசாங்கத்திடமிருந்து வர வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் அரசாங்கம் இதைப் பரிந்துரைக்கும் என்று நான் நம்பவில்லை,” என்று மகாதீர் மேலும் கூறினார்.
அதற்கு முந்தைய நாள், முஹைதீனின் மூத்த அந்தரங்கச் செயலாளர் மர்சுகி மொஹமட் ஒரு வீடியோ பதிவில், மகேரன் நிறுவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அம்னோ மற்றும் டிஏபி தலைவர்களும் இதேபோன்ற ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்மொழிவு பொதுமக்களுக்கு வரும் முன்பே, பி.கே.ஆருக்கு இந்தத் திட்டம் பற்றி தெரிந்துள்ளது.
நேற்று, மே மாத இறுதியில் அன்வர் தன்னைத் தொடர்பு கொண்டார் என்பதையும் மகாதீர் உறுதிப்படுத்தினார், ஆனால் மாகேரன் பற்றி விவாதிக்கப்பட்டதா இல்லையா என்பதை அவர் குறிப்பிடவில்லை.