நாட்டின் ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்றம் மீண்டும் கூட வேண்டும் என்ற தனது விருப்பத்தை, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுக்கு அம்னோ தெரிவித்தது.
அதே நேரத்தில், அதன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, தேசியச் செயல்பாட்டு மன்றப் (மாகேரன்) பாணியிலான ஓர் அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் இந்த நேரத்தில் இல்லை என்றும் நம்புகிறார்.
சுல்தான் அப்துல்லாவை எதிர்கொண்ட பின்னர், ஊடகங்களிடம் பேசிய அஹ்மத் ஜாஹித், கலந்துரையாடலில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர, ஆகஸ்ட் 1-க்குப் பிறகு அவசரகால அமலாக்கத்தை நீட்டிக்கக் கூடாது என்ற அம்னோவின் நிலைப்பாட்டையும் தெரிவித்ததாகக் கூறினார்.
கடந்த இரண்டு நாட்களில், அகோங்கைச் சந்தித்த கட்சித் தலைவர்கள் எழுப்பிய சராசரி பிரச்சினைகள் அவசரநிலையும் மக்களவை கூட்டப்பட வேண்டும் என்பதுமே ஆகும்.
பெஜூவாங் கட்சி தலைவர், டாக்டர் மகாதீர் முகமது, நேற்று அகோங்கிடம் முன்மொழிந்த, மாகேரன் பாணியிலான அரசாங்கத்தை இன்று பிஎச் நிராகரித்தது. அதற்குப் பதிலாக அவசரகால அமலாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், மக்களவை மீண்டும் கூட்டப்படவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அகோங்குடனான சந்திப்பில், மாகேரன் பிரச்சினையும் எழுந்ததா என்று கேட்டதற்கு, அஹ்மத் ஜாஹித் இல்லை என்றார்.
“நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை, இந்த விஷயம், ஏற்கனவே உள்ளதைத் தாண்டிய நெறிமுறை சூழ்நிலைகளில் ஒன்று என்று நான் உணர்கிறேன், ஏனென்றால் அவசரநிலை (ஏற்கனவே) அந்தக் கேள்விகளை (மாகேரன்) நீக்கி இருக்க வேண்டும்.
“ஆனால், இது மற்ற நோக்கங்களை அடைய பயன்படுத்தப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.