லிம் : பி40, எம்40 கடன்தாரர்களுக்குத் தானியங்கி கடன் ஒத்திவைப்பு – அகோங் ஒப்புதல்

டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, மக்களுக்குக் கூடுதல் நிதி உதவி வழங்க ஒப்புக் கொண்டார் என்று கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்தானா நெகாராவில், சுல்தான் அப்துல்லாவைச் சந்தித்தபோது இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதாக லிம் கூறினார்.

“(அந்த நேரத்தில்) வாழ்க்கையைத் தொடர அரசாங்க உதவி தேவைப்படும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளை நான் எழுப்பினேன்.

“ஒரு கால வரம்பைக் குறிப்பிடாமல், வேலைகள் மற்றும் வணிகங்களைக் காப்பாற்ற அதிக நிதி உதவிகளை வழங்கவும், வங்கி கடன்களுக்கான (தி20 குழுவைத் தவிர) ஒரு தானியங்கி தடைக்கும் பேரரசர் ஒப்புக்கொண்டார்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

​​முழு நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில், முழுமையாகச் செயல்பட முடியாத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ), பி40 குழுவினர் மற்றும் வேலை இழந்தவர்களுக்குத், தற்போது வங்கிகள் மூன்று மாதக் கடன் தடை அல்லது ஆறு மாதங்களுக்குத் திருப்பிச் செலுத்துவதில் 50 விழுக்காடு குறைப்பு ஆகியவற்றை வழங்குகின்றன.

இருப்பினும், கடன் வாங்கியவர்கள் அச்சலுகையைப் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முன்னாள் நிதியமைச்சரான லிம், பி40 குழுவிற்கான தற்போதையத் தடைக்காலத்தில், வங்கிகள் வட்டி விகிதங்களை ஒதுக்கி வைக்காமல், கடன் கொடுப்பனவுகளை மட்டுமே ஒத்திவைத்தன, இதனால் நிலுவையில் உள்ள கடன் அதிகமாக இருக்கும் என்றார்.

முன்னதாக, பி40 குழுவினருக்கான தானியங்கி தடையை நீட்டிக்க, வங்கிகளைக் கட்டாயப்படுத்த அரசாங்கத்தால் முடியாது என்ற நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸின் அறிக்கையை அவர் மறுத்தார்.

“அரசாங்கத்திற்கு எந்தச் செலவும் இன்றி, வங்கிகளைக் கட்டாயப்படுத்த அவசரகால அதிகாரங்களைத் தேசிய நலனுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதைத் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் மறந்துவிட்டது,” என்று அவர் கூறினார்.

தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்னும் நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்தால், குறைந்தது 50,000 எஸ்எம்இ-க்கள் திவாலாகும் ஆபத்து உள்ளது என்ற மலேசிய எஸ்எம்இ சங்கத்தின் அறிக்கையையும் அவர் மேற்கோள் காட்டினார்.