`டிபிபியைச் சந்திக்க முடியவில்லை என்றால் உண்ணாவிரதம்`

மறைந்த டி நவீனின் குடும்பத்தினரும் நண்பர்களும், ஜூன் 22-ஆம் தேதிக்கு முன்னர் வழக்கைத் தொடரத் தவறினால் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர் என்று ஆர்வலர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் எங்களைச் சந்திக்கத் தயாராகும் வரை, நவீனின் தாயார் சாந்தி துரைராஜ் மற்றும் அவரின் நண்பர் பிரவினுடன் நானும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்,” என்று நவீன் அதிரடி மற்றும் புலனாய்வு லீக்கின் (நேய்ல்) தலைவரான அருண் கூறினார்.

இதற்கிடையில், இந்த நடவடிக்கை நீதிமன்ற வழக்கை சீர்குலைக்கவோ அல்லது துணை அரசு வழக்கறிஞரை (டிபிபி) அச்சுறுத்துவதோ அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

“மிகவும் தாழ்மையுடன், டிபிபிக்கு இது எங்கள் செய்தி. அடுத்த விசாரணை தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஜூன் 22-க்கு முன்னர் நாங்கள் அவரைச் சந்திக்க வேண்டும். “

“சந்திப்பு நேரிடையாக இருக்க வேண்டியதில்லை, அது மெய்நிகரிலும் செய்யப்படலாம்.”

15 ஜூன் – பகடிவதை எதிர்ப்பு நாளாக அறிவிக்கவும்

அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) நவீன் மரணத்தின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.

பகடிவதை பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நேய்ல் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கும் என்று அருண் கூறினார், ஜூன் 15-ஐப் பகடிவதை எதிர்ப்பு நாளாக அறிவிப்பது உட்பட.

நவீன் ஜூன் 9, 2017 இரவு தனது நண்பர் டி பிரவினுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் தனது முன்னாள் பள்ளித் தோழர் உட்பட சில இளைஞர்களால் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நவீன் கடத்தப்படுகிறான், அதே நேரத்தில் பிரவின் தப்பித்து உதவிக்காக நவீனின் வீட்டிற்குச் செல்கிறான்.

அடுத்த நாள், நவீன் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நவீன், ஜூன் 15, 2017 அன்று காலமானார்.

நான்கு சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சம்பவம் நடந்த நேரத்தில் வயது குறைந்தவர்கள்.

பினாங்கு உயர்நீதிமன்றம், இவ்வாண்டு மே 5-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கியது, மேலும் வழக்கு ஜூன் 29, 30 மற்றும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகியத் தேதிகளில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், பிரவீன், நவீனின் தாயார் சாந்தி மற்றும் சாந்தியின் சகோதரர் கருணாகரன் ஆகியோர் நான்கு போலிஸ் புகார்களைப் பதிவு செய்தனர், இந்தச் சம்பவத்தில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்க.

மற்றவற்றுடன், இந்த வழக்கில் சுமார் 20 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுவதாகப் பிரவீனின் அறிக்கை கூறியுள்ளது. பிரவீனுக்கும் மரண அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பினாங்கிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.