93 ஓராங் அஸ்லி மாணவர்கள் எஸ்பிஎம்-இல் சிறப்பு தேர்ச்சி

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மலேசியக் கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்.) 2020 தேர்வில், 93 ஓராங் அஸ்லி மாணவர்கள் சிறந்த முடிவுகளைப் பெற்றனர், அவர்களில் இருவர் 9ஏ-க்களையும் பெற்றுள்ளனர்.

கிராமப்புற வளர்ச்சித் துறை துணை அமைச்சர், அப்துல் இரஹ்மான் மொஹமட் கூறுகையில், 9ஏ-க்களைப் பெற்ற அந்த மாணவர்கள் ரொம்பின் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜூனிசா எலியானா தியோ சீ ஹுவாங் மற்றும் முவட்ஸம் ஷா மாரா அறிவியல் கல்லூரியைச் (எம்.ஆர்.எஸ்.எம்) சேர்ந்தவர்கள் ஆவர்.

இது தவிர, எட்டு மாணவர்கள் 8ஏ, 10 மாணவர்கள் (7ஏ), எட்டு மாணவர்கள் (6ஏ), 31 மாணவர்கள் (5ஏ), 34 மாணவர்கள் 4ஏ முடிவுகளைப் பெற்றுள்ளனர்.

“கோவிட்-19 தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டபோது, 2020-ஆம் ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வு ஒரு புதிய விதிமுறையில் நடைபெற்றது என்பது பொதுவில் அறியப்பட்டது.

“இந்தத் தொற்றுநோயின் பரவலானது, 2020-ஆம் ஆண்டில் எஸ்பிஎம் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களைத் தயார்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தியது, இருப்பினும், ஓராங் அஸ்லி மாணவர்கள் காட்டிய சிறந்த சாதனைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அப்துல் இரஹ்மானின் கூற்றுப்படி, மாணவர்களின் வெற்றி பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (ஜாகோவா) உட்பட அனைத்து தரப்பினரின் கடின உழைப்பின் விளைவாகும், அவர்கள், பிற சமூகங்களுடன் போட்டியிடும் வகையில், ஓராங் அஸ்லி மாணவர்களை ஊக்குவிக்கக்கூடிய பல்வேறு உதவிகளையும் சிறப்பான கல்வித் திட்டங்களையும் வழங்குவதில் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளார்கள்.

ஓராங் அஸ்லி மாணவர்களுக்குக் கல்வி மூலம் பாக்கெட் பணம், போக்குவரத்து, உபகரணங்கள், ஆடை மற்றும் பிற உதவிகளையும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சு (கே.பி.எல்.பி) வழங்கியுள்ளது என்று அவர் விளக்கினர்.

  • பெர்னாமா