அவசரகால நிலை நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து அமைச்சரவை மாமன்னருக்கு ஆலோசனை வழங்கும் என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் கூறியதை, மக்களவை துணை சபாநாயகர் அஸலினா ஓத்மான் சைட் விமர்சித்தார்.
தக்கியுடின் வகிக்கும் பதவியில், ஏற்கனவே அனுபவம் உள்ள அஸலினா, அவசரகாலம் முடிவுக்கு வரும்போது அரசாங்கம் “கோல் கம்பத்தை நகர்த்தக்கூடாது” என்று கூறினார்.
“அப்படியானால் (அமைச்சரவை அகோங்கிற்கு ஆலோசனை வழங்கும்), 2021 அவசரகால ஆணை, பிரிவு 2 (1)-இன் கீழ், யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு ஆலோசனை வழங்க ஒரு சுயாதீனச் சிறப்புக் குழுவை அமைத்ததன் பயன் என்ன?
“கோல் கம்பத்தை நகர்த்துவதை நிறுத்துங்கள்!” என்று அவர் தக்கியுடினைத் தேக் செய்து, தனது கீச்சகத்தில் பதிவு செய்தார்.
அச்சட்டத்தின், பிரிவு 2 (1)-இன் கீழ், 19 பேர் கொண்ட சுயாதீன குழுவுக்கு ஒரு பணி உள்ளது – அவசரகாலத்தை முடிவுக்கு வர வேண்டிய தேதி குறித்து அகோங்கிற்கு அது ஆலோசனை வழங்கும்.
இருப்பினும், அந்தச் செயற்குழு வாயை மூடிக்கொண்டு உள்ளதாகத் தெரிகிறது, அதன் தலைவர் அரிஃபின் ஜகாரியா அக்குழுவின் அறிக்கை அகோங்கிற்கு மட்டுமே என்று கூறினார்.
வழக்கறிஞர் ஹனிஃப் காத்ரி, அவசரகால ஆணை சட்டத்தில் குழுவின் பங்கு பொறிக்கப்பட்டிருப்பதால் – அவசர காலத்தில் அகோங்கிற்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பை அமைச்சரவையில் இருந்து, அக்குழுவுக்கு அரசாங்கம் மாற்றி அமைத்தது.
“ஆகவே, அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) ஆணை 2021, பிரிவு 2 (1) -இன் விதிகளுக்கு இணங்குமாறு தக்கியுடின் அறிவுறுத்தப்படுகிறார்.
“நாடாளுமன்ற மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில், சுயாதீன சிறப்புக் குழுவின் அவசர விவகாரங்களில் முஹைதீன் யாசினின் அரசாங்கம் தலையிடாது என்பதை உறுதி செய்ய வேண்டும், மேலும் சுயாதீன சிறப்புக் குழுவின் அறிக்கையின் இரகசியத்தன்மையும் தனியுரிமையும் அகோங்கின் பார்வைக்காகவும் ஆலோசனைக்காகவும் மட்டுமே,” என்று அவர் கூறினார்.
அவசரகாலம் ஆகஸ்ட் 1-ல் முடிவடையுமென முன்னதாகத் திட்டமிடப்பட்டது.
அவசர காலங்களில், அகோங்கிற்கு ஆலோசனை வழங்குவது அமைச்சரவையின் பொறுப்பு என்று தக்கியுடின் முன்பு வலியுறுத்தினார்.
சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்குப் பதிலளிக்கும் விதமாக தக்கியுடின் இதனைத் தெரிவித்தார்.