சமையல் எண்ணெய் விலையேற்றம்! பெரிக்காத்தான் ஆட்சியின் “சாதனையா” குலா கேள்வி!

சாதாரண ஏழை பாட்டாளி மக்கள் முதல் பணக்காரர் வரையில் பயன்படுத்தும் 5 கிலோ   சமையல் எண்ணெயின் விலை 17 வெள்ளியில் இருந்து 33 வெள்ளியாக   உயர்ந்தற்கு யார் காரணம் ?

பாக்தாத்தான் அரசு ஆட்சி அமைக்கும் போது  21 வெள்ளியாக இருந்த 5 கிலோ சமையல் எண்ணெய்யின் விலை 17 வெள்ளியாக குறைக்கப்பட்டது.ஆனால் வெறும் 16 மாதமாக ஆட்சியில் இருக்கும்  பெரிக்காத்தான் நேஷனல் அரசின் ஆட்சியில்  33 வெள்ளியாக  ஆக  அதன் விலை   எகிறிப் போயுள்ளது.

பாக்காத்தான் அரசு தனது 22 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று  சொல்வோருக்கு அவர்கள் இருந்தபோது செய்த சமையல் எண்ணெய்யின் விலைக்குறைப்பு  சாதனையாகத் தெரியவில்லையா?

மக்களுக்கு 5 கிலோ எண்ணெய்யின் விலை அதிகமாக தெரிந்தால் , நெகிழிப் பையில் வரும் எண்ணெய் குறைவான விலையில் விற்கிறதே அதை வாங்கிக் கொள்ளலாமே என்று பெரிக்காத்தான் அமைச்சர் கூறியதாக தகவல் வந்துள்ளது!

இந்த நையாண்டி கேள்வி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருக்கின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கடமை மக்களின் சுமையை குறைப்பது.

ஏற்கனவே பாக்காதான் ஹராப்பான் ஆட்சியில் இருந்த விலைய விட  பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் விலைக்குறைப்பு நிகழ்ந்திருந்தால் அதை சாதனை எனலாம்  . ஆனால் விலையை கட்டுப்படுத்தாமல் அதை மேலே ஏறவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் சாதனையா?

அவசரகாலத்தை பிரகடனப்படுத்திவிட்டு  சகல அதிகாரங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பெரிகாத்தான் அரசாங்கம் ஏன் அதற்குள்ள சர்வாதிகாரத்தைக் பயன் படுத்தி   சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தவில்லை?

விலைகளை சந்தை நிலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது என்றால் அது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.காரணம் மலேசிய  சமையல் எண்ணெய்யை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாகும் . வெளி நாட்டில் உற்பத்தியாகி மலேசியா இறக்குமதி செய்யுமேயானால் விலை ஏற்ற இறக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

அவசாரகால சட்டத்தின் கீழ் அரசாங்கம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் உண்மை.

சமையல் எண்ணெய் அத்தியாவசியப் பொருள்,மக்களால் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒன்று. அதன் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் மனது வைத்தால் முடியும்.

ஏன் இதுவரை செய்ய முடியவில்லை ?

கடந்த  ஒன்றரை ஆண்டு காலமாக மக்கள் கோவிட் 19 தொற்றால் வேலை இழந்து , கடனாளியாகி பணம் கையில் இல்லாமல் சொல்லொண்ணா துயரத்தில் வாடிக்கொண்டிருக்கும் போது இந்த அத்தியாவசிய சமையல் எண்ணெய் விலை ஏற்றம் அவர்களை வெகுவாக பாதிக்கும் என்பதை பெரிக்காத்தான் அரசு உணரவில்லையா ?    அல்லது உணர மறுக்கிறதா ?

எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு  சாதகமாக பெரிக்கத்தான் அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழத் தொடங்கியுள்ளது. இது பெரிக்காத்தான் அரசின் மீதுள்ள அவநம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும்

மு குலசேகரன்

ஈப்போ பாரட் காடளுமன்ற உறுப்பினர்

தேசிய உதவித் தலைவர், ஜனநாயக செயல் கட்சி

முன்னாள் மனித வள அமைச்சர்