நாடாளுமன்றம் விரைவில் கூடும் என்றார் பேரரசர் – தக்கியுடின்

நாடாளுமன்றம் மீண்டும் விரைவில் கூட்டப்படும் என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

இருப்பினும், மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நாடாளுமன்றம் கூடும் சரியான தேதியைச் சொல்லவிலை என்று அவர் கூறினார்.

“அகோங் எந்த மாதம் என்று சொல்லவில்லை, ஆனால் விரைவில்.

“நமது பிரதமரும் 9 அல்லது 10-ம் மாதம் என்று கூறினார், இப்போது நாங்கள் 6-ம் மாத இறுதியின் அருகில் இருக்கிறோம், 7,8 அல்லது 9-ம் மாதத்தில் நிச்சயமாக நடைபெறும்,” என்று நேற்று சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட பிச்சாரா ஹராக்கா நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

அரண்மனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், அரசியல் கட்சித் தலைவர்கள், 2021 அவசரகால சுயாதீன சிறப்புக் குழு மற்றும் அரசு நிறுவன நிபுணர்களின் விளக்கங்கள் அனைத்தையும் செவிமடுத்த பின்னர், கூடிய விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று மாமன்னர் கருத்து தெரிவித்தார்.

கோவிட் -19 தொடர்பான தேசிய மீட்புத் திட்டம் அதன் மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் போது நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க முடியும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் சமீபத்தில் கூறினார்.

மூன்றாம் கட்டத்திற்கு மாறுவதற்கு, தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை 2,000-க்கு மேல் போகாமலும், தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) போதுமான திறனோடு, மலேசியர்களில் 40 விழுக்காட்டினர் முழு அளவிலான தடுப்பூசி பெற்ற பிறகு செய்யப்படும்.

இது செப்டம்பரில் அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவசரகால நிலை பிரகடனம் ஜனவரி 11 முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவசரகால நிலை, சுயாதீனக் குழுவின் ஆலோசனையைப் பொறுத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது அன்றைய தேதியிலோ முடிவடையும்.

கோவிட் -19 தொற்றில் கவனம்

இதற்கிடையில், நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, ​​எம்.பி.க்கள் கோவிட் -19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று தக்கியுடின் கூறினார்.

முஹைதீன் அறிவித்தபடி, மீட்புத் திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அகோங் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார் என்றார் அவர்.

“எம்.பி.க்களின் பங்கு குறித்தும் அகோங் கூறினார். கோவிட் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க இந்த நாடாளுமன்றக் கூட்டம் முக்கியமானது என்றார் மாமன்னர், மேலும் அவர் வேறு எதுவும் சொல்லவில்லை,” என்று தக்கியுடின் கூறினார்.