கூடுதல் உதவிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது – ஜஃப்ருல்

அரசாங்கம் தற்போதுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருகிறது, அடுத்தடுத்த மாதங்களில், பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகங்களின் உயிர்வாழ்வை ஆதரிக்கக் கூடுதல் உதவிகளை அறிமுகப்படுத்தவும் தயாராக உள்ளது.

தேசிய மீட்பு திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நான்காம் கட்டம் வரை செயல்பட அனுமதிக்காதப் பொருளாதாரத் துறைகளையும் அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டதாக நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

“நிதி அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடல்கள் மூலம், எதிர்காலத்தில் கூடுதல் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

“விவரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவ நிதி அமைச்சு மேம்பாடுகளை வகுக்க முடியும்,” என்று அவர் நேற்று இரவு அவானி 7.45 நிகழ்ச்சியில் மக்கள் நலன் மற்றும் தேசிய மீட்பு திட்டம் குறித்து கருத்து தெரிவித்தார்.

ஊதிய மானிய (பி.எஸ்.யூ.) திட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொண்ட தெங்கு ஜஃப்ருல், பொதுத்துறை நிறுவனத்தையும், குறிப்பாக தேசிய மீட்புத் திட்டத்தின் கடைசி கட்டம் வரை செயல்பட அனுமதிக்காத துறைகளையும் அரசாங்கம் மதிப்பாய்வு செய்துள்ளது என்றார்.

“இதுவரை, நாங்கள் பி.எஸ்.யூ.-ஐ ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளோம், மூன்றாம் மற்றும் நான்காவது கட்டங்களில் திறக்க முடியாத துறைகளுக்கு, நாங்கள் உதவிகள் வழங்குவோம். தற்போதுள்ள உதவிகளையும் நடவடிக்கைகளையும் மற்றும் அதன் செயலாக்கத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்,” என்று அவர் கூறினார்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்ஸோ), 2.72 மில்லியன் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில், முதலாளிகளிடமிருந்து 330,586 விண்ணப்பங்களுக்கு மொத்தம் RM15.04 பில்லியன் செலுத்துதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த தெங்கு ஜஃப்ருல், தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0-இன் போது, நாடு ஒரு நாளைக்கு RM1 பில்லியனை இழந்து வருகிறது, ஆனால் அடுத்த கட்டங்களுக்குள் நுழையும்போது அந்த அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“உடல் குறிகாட்டிகள், தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்துறை திறப்புகளை ஒரு வழக்கமான அடிப்படையில் ஓர் அளவுகோலாகப் பார்ப்போம்,” என்று அவர் கூறினார்.

பி.கே.பி. 1.0 செயல்பாட்டின்போது, மலேசியா ஒரு நாளைக்கு RM2.4 பில்லியன் இழப்பை சந்தித்தது, மேலும் பி.கே.பி. 2.0-இன் போது ஒரு நாளைக்கு RM 300 மில்லியனாக அது குறைந்தது, ஏனெனில் அதிகப் பொருளாதாரத் துறைகள் அப்போது செயல்பட அனுமதிக்கப்பட்டன.

  • பெர்னாமா