கோவிட் -19 தடுப்பூசி : தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை – சி.ஐ.தி.எஃப்.

பொதுத் தேர்வுகளுக்கு அமரவிருக்கும் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றக் கல்வி அமைச்சின் திட்டத்தைத், தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தலைமையிலான கோவிட்-19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (சி.ஐ.தி.எஃப்.) ஒப்புக் கொண்டுள்ளது.

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்த, தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவு (என்.பி.ஆர்.ஏ.) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மூத்தக் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இதனைத் தெரிவித்தார்.

“ஆசிரியர்கள் தடுப்பூசிக்கு, இதுவரை 90,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குறைந்தது ஒரு மருந்தளவு தடுப்பூசி ஊசி பெற்றுள்ளனர். கல்வியமைச்சு எப்போதும் சிறந்ததைச் செய்ய உறுதியுடன் உள்ளது,” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கைரி இந்த விஷயத்தை விளக்கும் ஒரு சிறு வீடியோவையும் ராட்ஸி பகிர்ந்துகொண்டார்.

நேற்று, தி ஆக்ஸ்போர்டு & கேம்பிரிட்ஜ் சொசைட்டி மலேசியா இயங்கலையில்  ஏற்பாடு செய்த ‘மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கானப் பாதை : கைரி ஜமாலுதீன்’ (`The Path to Herd Immunity: Up Close with YB Khairy Jamaluddin’) எனும் நிகழ்ச்சியில் கைரி அதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சினால் பெறப்பட்ட தரவுகளின்படி, 357,000 படிவம் ஐந்து மாணவர்களும் 47,000 படிவம் ஐந்து மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனக் கைரி கூறினார்.

“பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் பிள்ளைகள், பரீட்சைகளுக்குத் தயாராகப் பள்ளிக்குத் திரும்ப வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு நாங்கள் கல்வியமைச்சுடன் இணைந்து செயல்படுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

  • பெர்னாமா