முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அஜீஸ், சமீபத்தில், அகதிகள் மற்றும் வெளிநாட்டினர் மீது அதிகாரிகள் செய்த சில எதிர்மறை சித்தரிப்புகளை விமர்சித்துள்ளார், இது மலேசியாவின் மனிதாபிமான பாரம்பரியத்திற்கு எதிரானது என்று அவர் கூறினார்.
“இது உண்மையில் மலேசியர்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். மலேசியர்கள் எப்போதும் அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கிறார்கள்,” என்று நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.
மலேசியக் குடிநுழைவுத் துறை கீச்சகத்தில், அண்மையில் பதிவேற்றப்பட்ட ரோஹிங்கியா வெளிநாட்டினர் குறித்த தேசியச் சிறப்பு பணிக்குழுவின் (என்.டி.எஃப்.) சுவரொட்டி குறித்து நஸ்ரி கருத்து தெரிவித்தார், பல விமர்சனங்களுக்குப் பின்னர் அந்தச் சுவரொட்டி நீக்கப்பட்டது.
அந்தச் சுவரொட்டி, “ரோஹிங்கியா இனப் புலம்பெயர்ந்தோர், உங்களின் வருகை அழைக்கப்படாதது” என்ற மலாய் சொற்களில், கடலில் மரக் கப்பல்களில் ஏறும் அகதிகள் பின்னணியுடன், மலேசியப் போலிஸ், இராணுவம் மற்றும் கடல்சார் அமலாக்க அமைப்புகளின் மூன்று ஆயுதமேந்திய உறுப்பினர்களுடன் இருந்தது.
சுவரொட்டி நீக்கப்பட்ட போதிலும், உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின், தனது முகநூலில் வெளிநாட்டினர் குறித்த தகவல்களைப் பகிர்ந்தபோது, அந்த எதிர்மறையான கதை தொடர்ந்தது.
நாட்டின் முன்னணி நாளிதழ் ஒன்றும், ரோஹிங்கியா எதிர்ப்பு கருத்துக்களைக் கொண்டிருந்த ஒரு கட்டுரையை வெளியிட்டதைத் தொடர்ந்து, அது மேலும் கவனத்தை ஈர்த்தது.
நாட்டில் இனவெறி உணர்வு அதிகரிப்பது குறித்து கேட்டதற்கு, மலேசியர்களில் பெரும்பான்மையினர் இன்னும் அதுபோன்ற உணர்வைக் கொண்டிருக்கவில்லை என்று தான் நம்புவதாக நஸ்ரி கூறினார்.
“ரோஹிங்கியா சமூகம் சம்பந்தப்பட்ட சில எதிர்மறையான சம்பவங்கள் மலேசியர்களைக் கோபப்படுத்தியிருக்கலாம், ஆனால் சுவரொட்டிகளை இடுவதற்கும் அவர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை நடத்துவதற்கும் அதை ஒரு காரணமாகப் பயன்படுத்தக்கூடாது,” என்று அவர் கூறினார்.