பேராக் எம்பி சுவரொட்டி : போலீசார் ஃபாஹ்மி ரேஸாவை அழைப்பார்கள்

பேராக் மந்திரி பெசார் (எம்பி) சரணி மொஹமட் தொடர்பான முகநூல் மற்றும் கீச்சகத்தில் பதிவேற்றப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பான விசாரணைக்கு உதவ, கிராஃபிக் டிசைனரும் ஆர்வலருமான ஃபாஹ்மி ரேஸாவைப்ப்  போலீசார் அழைப்பார்கள்.

நேற்று பிற்பகல், பேராக் அம்னோ இளைஞர் தலைவர், மொஹமட் அரிஃப் அப்துல் மஜிட், கோல கங்சார் மாவட்டக் காவல் தலைமையகத்தில் செய்த புகாரைத் தொடர்ந்து, தாங்கள் விசாரணையைத் தொடங்கவுள்ளதாகப் பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

“இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரையும் (ஃபஹ்மி ரேஸா) பிறரையும் விரைவில் நாங்கள் விளக்கமளிக்க அழைப்போம்.

“அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன், வேண்டுமென்றே அவமானப்படுத்தியதற்காகத் தண்டனைச் சட்டம் பிரிவு 504 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233, இது வலைதள வசதிகள் அல்லது வலைத்தளச் சேவைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தல் தொடர்பில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

நேற்று, பேராக் எம்பி-க்கு எதிராக வேண்டுமென்றே வெறுப்பைத் தூண்டும், அவதூறாகக் கருதப்படும் ஒரு சுவரொட்டி குறித்து மொஹட் அரிஃப் போலிஸ் புகார் செய்தார்.

‘நாங்கள் சாப்பிட சார்டினைக் கொடுத்திருக்கிறோம், நீங்கள் கோழியைக் கேட்காதீர்கள்’ என்ற வரிகளுடன் ஃபஹ்மி ரேஸா பதிவேற்றிய அச்சுவரொட்டி, சமூக ஊடக பயனர்களிடமிருந்து விமர்சனங்களையும் சாடல்களையும் பெற்றது என மொஹட் ஆரிஃப் சொன்னதாகக் கூறப்படுகிறது.

சரணியின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோ அடிப்படையில், ஏழை மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒய்.தி.எல். அறக்கட்டளை பேராக் மாநில அரசுக்கு நன்கொடையாக வழங்கியத் திறன்பேசிகள் குறித்து பேராக் மந்திரி பெசார் ஓர் ஒப்புமையைத் தந்தார் என மொஹமட் ஆரிஃப் கூறினார்.

பேராக் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் உள்ள வீடியோ கிளிப்பைப் பற்றிய குறிப்பில், ஃபஹ்மி ரெட்ஸா பதிவேற்றிய சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது போல் இல்லை என்றும், அது ஒருபோதும் சரணியால் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா