பல்கலைக்கழக வலைத்தளங்களின் ஆய்வுகள் அடிப்படையில், தேசியக் கூட்டணி (பி.என்.) உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறைந்தது 13 பேர் பொது பல்கலைக்கழகங்களின் வாரிய இயக்குநர்கள் குழுவிலோ அல்லது ஆளுநர் குழுவிலோ பதவி வகிக்கின்றனர்.
இதுபோன்ற அரசியல் நியமனங்கள் “மிகவும் பொருத்தமற்றவை” என்று சிலாங்கூர் கல்வி குழுவின் முன்னாள் பொறுப்பாளர் நிக் நஸ்மி நிக் அகமது மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மேலும் கூறுகையில், கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில், மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளை உயர்க்கல்வி அமைக்சு கவனிக்க வேண்டும் என்றார்.
“அவர்கள் (அமைச்சு) அதைச் செய்யவில்லை, ஆனால் அதே நேரத்தில், இதையெல்லாம் செய்ய அவர்களுக்கு நேரம் இருக்கிறது (அரசியல் பதவியேற்பு).
“இது மிகவும் பொருத்தமற்றது, இந்த நேரத்தில் இதனைச் செய்வது உயர்க்கல்வி அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது,” என்று நிக் நஸ்மி மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.
அரசியல்வாதிகளை விட, ஒரு பொது பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள் குழுவில் அல்லது ஆளுநர் குழுவில் நியமிக்கக்கூடிய பல தொழில் வல்லுநர்கள் வெளியில் இருக்கிறார்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
இது பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது, நடைமுறையில் இருந்த ஒன்று என்றும் அவர் கூறினார்.
“அவர்கள் மற்ற நிபுணர்களை (பி.எச். நியமிக்கப்படாதவர்கள்) நியமிக்கலாம். பல்கலைக்கழகங்களை அரசியல்மயமாக்குவதற்கு வரம்புகள் இருக்க வேண்டும், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (ஜி.எல்.சி.) ஒருபுறம் இருக்கட்டும்.
“பல்கலைக்கழகங்கள் மிகவும் சுயாதீனமாக இருக்க வேண்டும், ஒரு பக்கச்சார்பு விஷயங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று நிக் நஸ்மி கூறினார்.
கடந்த காலங்களில், ஜி.எல்.சி. மற்றும் அரசு நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பதிலாக, அரசு சார்பு அரசியல்வாதிகளை நியமித்ததற்காக பி.என். நிர்வாகம் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 13 பி.என். அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் பட்டியல் பின்வருமாறு:
1. நோர்லிசா அப்துல் இரஹீம் (அம்னோ) – மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
2. அப்துல் அஜீஸ் அப்துல் இரஹ்மான் (முபாரக்) – பஹாங் மலேசியப் பல்கலைக்கழகம்
3. அவாங் அடெக் ஹுசின் (அம்னோ) – மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
4. அப்துல் இரஹ்மான் தஹ்லான் (அம்னோ) – சபா மலேசியப் பல்கலைக்கழகம்
5. முஹமட் அல்வி சே அஹ்மத் (அம்னோ) – மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
6. கைருல் எஸ்வான் ஹருண் (அம்னோ) – வட மலேசியப் பல்கலைக்கழகம்
7. இப்ராஹிம் அபு ஷா (அம்னோ) – மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
8. அஹ்மத் ஷாலிமின் அஹ்மத் ஷாஃபி (அம்னோ) – மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம்
9. கைரில் நிஜாம் கிருட்டின் (பாஸ்) – திரெங்கானு மலேசியப் பல்கலைக்கழகம்
10. முகமட் ஷரீப் சம்சுதீன் (அம்னோ) – பஹாங் மலேசியப் பல்கலைக்கழகம்
11. அப்லி யூசோஃப் (அம்னோ) – சுல்தான் ஜைனல் அபிடின் பல்கலைக்கழகம்
12. ஹுசைன் அவாங் (பாஸ்) – சுல்தான் ஜைனல் அபிடின் பல்கலைக்கழகம்
13. மொஹமட் சாஸிலி ஷாஹிபி (அம்னோ) – மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்