கல்வி அமைச்சின் 18,702 கல்வியாளர்களை ஆசிரியர்களாக விசேடமாக ஆட்சேர்ப்பு செய்வது, பட்டதாரிகளிடையே நிலவும் வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் மட்டும் இருக்கக்கூடாது எனத் தேசியக் கற்பித்தல் சேவை ஒன்றியம் (என்.யு.டி.பி) கூறியது.
கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடினின் அறிவிப்பை வரவேற்ற என்.யு.டி.பி. தலைவர் அமினுதீன் அவாங், அடுத்த அக்டோபரில் ஆசிரியர்களாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்களின் தரமும், அப்பணியின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வமும் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட வேண்டும் என்றார்.
“எங்களுக்கு உண்மையான கல்வியாளர்களாக இருக்க விரும்புபவர்களே தேவை, வேலைகளை மட்டும் விரும்புவோர் அல்ல.
“இந்த ஒரு திட்டத்தால், பட்டதாரிகளிடையே வேலையின்மை பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று என்.யு.டி.பி. நம்புகிறது.
“மிக முக்கியமாக, ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம், ஆசிரியர்கள் பற்றாக்குறையைச் சமாளிப்பது அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையாக இருக்க வேண்டும்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அமினுதீன் கூறினார்.
முன்னதாக, பொது சேவைத் துறை (ஜேபிஏ) மற்றும் கல்விச் சேவை ஆணையம் (எஸ்பிபி) உடனான கலந்துரையாடலின் விளைவாக, சிறப்பு ஆட்சேர்ப்பு திட்டம் உருவானதாக ராட்ஸி கூறினார்.
ராட்ஸியின் கூற்றுப்படி, ஆசிரியர் ஆட்சேர்ப்பில் உள்ள முக்கியச் சவால்களுக்குக் காரணம் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் (ஐபிஜி) வேட்பாளர்களின் பற்றாக்குறை மற்றும் பாட விருப்பங்களுடன் பொருந்தாத தன்மை ஆகும்.
தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம், வரலாறு, சிறப்புக் கல்வி, இஸ்லாமியக் கல்வி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியப் பாடங்களிலும், இடைநிலைப் பள்ளிகளில் மலாய், ஆங்கிலம், சிறப்புக் கல்வி, இஸ்லாமியக் கல்வி, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியப் பாடங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
‘நாட்டில் கற்பித்தல் தரத்தை பாதிக்கும்’
இதற்கிடையில், தேசியப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் சமூக நல ஆய்வுகள் மையத்தின் விரிவுரையாளர், டாக்டர் அனுவார் அஹ்மத், ஆசிரியர் பற்றாக்குறையின் பிரச்சினை, ஊழியர்களை ஒழுங்காக திட்டமிடுவதில் கல்வியமைச்சின் தோல்வியிலிருந்து உருவாகிறது என்றார்.
சில பாடங்களுக்கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, கல்விதுறை சாராத பட்டதாரிகளை ஏற்றுக்கொள்வதைக் கல்வியமைச்சு பரிசீலிப்பது வருத்தம் அளிப்பதாக அவர் சொன்னார்.
“மற்ற துறைகளின் பட்டதாரிகளை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அல்லது பொறியியலாளர்களாக மாற்ற முடியுமா? கற்பித்தல் தொழிலில் மட்டும் இது ஏன் அனுமதிக்கப்படுகிறது?
“இது ஒரு தொழில்சார்ந்த செயல் அல்ல, இது நாட்டில் கற்பிக்கும் தரத்தைப் பாதிக்கும்?
“இது ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் கூடுதல் வகுப்பு (டியூசன்) நிலை போன்றது, இனி இதனை ஓர் அரசு பள்ளி நிறுவனமாக விவரிக்க முடியாது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்க்க கல்வியமைச்சு அனைத்து ஐபிஜி மற்றும் பொது பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்துவதே சிறந்தது என்று டாக்டர் அனுவார் கூறினார்.
ஆசிரியர்களின் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான கல்வியமைச்சின் நோக்கமும் முயற்சிகளும் நல்லதாகக் கருதப்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக பயன்படுத்தப்படும் மூலோபாயம் பொருத்தமானதல்ல, மேலும் கற்பித்தல் கட்டமைப்பிலும் தரத்திலும் அதிகச் சிக்கல்களை அது ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.