உலகச் சுகாதார அமைப்பால் (டபிள்யூ.எச்.ஓ.) பட்டியலிடப்பட்ட அனைத்து வகையான கோவிட் -19 தடுப்பூசிகளையும், உலக நாடுகள் அங்கீகரிக்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொள்ள வேண்டுமெனத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில், உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியும் அவசரகாலப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதால், டபிள்யூ.எச்.ஓ. வழிகாட்டுதல்களை ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பாக ஏற்று பயன்படுத்த வேண்டும் என்றார்.
அனைத்து கோவிட் -19 தடுப்பூசிகளையும் முழு உலகமும் அங்கீகரித்தால், பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைக்கு எதிரான பாகுபாடு பிரச்சினைகள் எழாது என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது, அதே நேரத்தில் சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மட்டுமே சீனா அங்கீகரிக்கிறது, அதாவது சினோவாக் மற்றும் சினோஃபார்ம்.
“உலகெங்கிலும் உள்ள நாடுகள், அவசரகாலப் பயன்பாட்டிற்காக டபிள்யூ.எச்.ஓ. ஒப்புதல் பெற்ற அனைத்து தடுப்பூசிகளையும் ஏற்க ஒப்புக்கொள்கிறதா அல்லது உலகெங்கிலும் உள்ள நாடுகள் அனைத்து தடுப்பூசிகளையும் ஏற்றுக்கொள்கிறதா என்பதுதான் கேள்வி.
“டபிள்யூ.எச்.ஓ., உலகின் அனைத்து நாடுகளையும் டபிள்யூ.எச்.ஓ. பட்டியலிட்டுள்ள தடுப்பூசிகளை அங்கீகரிக்கும்படி கேட்க வேண்டும். கொடுக்கப்படும் தடுப்பூசிகளுக்கு உலக நாடுகள் பாகுபாடு காட்டுகின்றன என்றால், இந்தத் தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான வழி அதுவல்ல,” என்று, கோலாலம்பூர், புக்கிட் ஜாலீல் தேசிய மைதானத்தில் முதல் நாளாகச் செயல்படும் தடுப்பூசி மையத்தை (பிபிவி) இன்று ஆய்வு செய்த பின்னர் அவர் கூறினார்.
- பெர்னாமா