எஸ்.பி.எம்.-இல் 9ஏ பெற்ற மாணவர், மாற்றுத்திறனாளி என்பதால் பல்கலைக்கழக வாய்ப்பு மறுக்கப்பட்டது

மாற்றுத் திறனாளி (ஓ.கே.யூ) மாணவர் ஒருவர், அவரது உடல் நிலை காரணமாக உள்ளூர் பொது உயர்க்கல்வி நிறுவனத்தில் (ஐ.பி.தி.ஏ.) தனது படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அக்கறைகொண்ட யு.எம். இந்தியப் பட்டதாரிகள் (குமிக் – Concerned UM Indian Graduates) மாணவர்கள் குழு கூறியது.

இந்தக் குழு உயர்க்கல்வி அமைச்சர் நோராய்னி அகமதுக்கு அனுப்பியக் கடிதத்தை மலேசியாகினி பார்வையிட்டது, 2019-ஆம் ஆண்டில், மலேசிய கல்விச் சான்றிதழில் (எஸ்.பி.எம்) கரிஷ்மாவுக்கு (அவரது உண்மையான பெயர் அல்ல) 9ஏ-க்கள் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்ச்சியுடன் முடிவுகளுடன் ஐபிதிஏ-வில் தனது படிப்பைத் தொடர அவருக்கு உரிமை உண்டு.

“ஆசாஸ்சிபின்தார் யூ.கே.எம். (ASASIpintar UKM) முன்-பல்கலைகழகத் திட்டத்தில் (எபிபி) பட்டியலிடப்பட்ட கரிஷ்மா, நேர்காணல்களில் கலந்துகொண்டதோடு, வீடியோ சமர்ப்பிப்புகள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளார்.

இருப்பினும், யுபியுஓன்லைன் (UPUOnline) புதுப்பித்தல் கட்டத்தில், முன்னதாக செய்யப்பட்ட தேர்வு பாடங்கள் காலியாக இருந்ததைக் கண்டறிந்தார், அதே நேரத்தில், அவரது தகுதி பட்டியலில் இரண்டு டிப்ளோமா திட்டங்களும் 20 சமூகக் கல்லூரி சான்றிதழ் திட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதையும் காட்டியது.

“20 பொது பல்கலைக்கழகங்கள், 36 பாலிடெக்னிக் மற்றும் நான்கு பொதுத்திறன் பயிற்சி நிறுவனங்கள் (மலேசியாவில்) இருந்த போதிலும், உடல் இயலாமை காரணமாக கரிஷ்மாவுக்கு இரண்டு டிப்ளோமா திட்டங்களுக்கும் சமூகக் கல்லூரி சான்றிதழ் திட்டங்களுக்கும் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்று குமிக்’கின் பிரதிநிதி ஆர் தனசேகர் இராமசாமி, ஜூன் 19 தேதியிட்ட கடிதத்தில் கூறினார்.

யுபியுஓன்லைன் என்பது பொது பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஓர் இயங்கலை விண்ணப்ப முறையாகும்.

2021/2022 கல்வி அமர்வுக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் எஸ்பிஎம் பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களைப் புதுப்பிக்க ஏதுவாக யுபியுஓன்லைன் புதுப்பிப்பு கட்டம் ஜூன் 15 முதல் ஏழு நாட்களுக்குத் திறந்திருந்தது.

பின்னர், அக்காலக்கெடு ஜூலை 2 வரை நீட்டிக்கப்பட்டது.

கரிஷ்மா பின்னர், யுபியு இணையதளத்தில் கருத்து அமைப்பு முறை மூலம் கேள்வி எழுப்பியதாக தனசேகர் கூறினார்.

அவருக்குத் தகுதிகள் இருந்தாலும், ஒரு பல்கலைக்கழகப் படிப்பு திட்டத்தைத் தேர்வு செய்ய முடியாது, காரணம் அவர் விண்ணப்பித்த பாடத் திட்டத்திற்குக் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கான வசதிகள் இல்லை என்று பணியில் இருந்த அதிகாரி கரிஸ்மாவிடம் கூறியுள்ளார்.

மலேசியாகினி பார்த்த மற்றொரு ஆவணத்தில், விண்ணப்பதாரர் எதிர்கொள்ளும் இயலாமை வகையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஓ.கே.யு.-நட்பு முறையிலான திட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க முடியும் என்று யுபியுஓன்லைன் கூறியுள்ளது.

யுபியுஓன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது இதேபோன்ற சிக்கல்களை எதிர்கொண்ட பிற மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களும் இருப்பதால், கரிஷ்மா தனித்து நிற்கும் ஒரு வழக்கு அல்ல என்று தனசேகர் கூறினார்.

இதனை எழுதும் நேரத்தில், யு.கே.எம். பல்கலைக்கழகமும் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சும் இந்த விஷயத்தை ஆராய தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், சாதகமாகப் பதிலளித்ததாகவும் தனசேகர் கூறினார்.

இதுக்குறித்து கருத்துகள் பெற, மலேசியாகினி யுகேஎம் மற்றும் யுபியுஆன்லைனை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.

‘வாய்ப்பை மறுக்காதீர்கள்’

இதற்கிடையில், குமிக் எழுப்பிய இப்பிரச்சினைக்கு, மலேசிய மாற்றுத் திறனாளிகள் அமைதி சங்கம் (டிடிபிஏஎம்) தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

 

“கரிஷ்மாவுக்கு வழங்கப்பட்ட விளக்கம், ஐபிடிஏவு-க்கான தகுதி நிலையை அடைய கடுமையாக உழைக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது.

“பொது பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான தகுதி மற்றும் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, மாணவர் தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், அதாவது பொது தேர்வு முடிவுகள் (எஸ்.பி.எம். மற்றும் எஸ்.தி.பி.எம்.), ஒரு மாணவரின் உடல் நிலை மற்றும் / அல்லது கல்வி நிறுவன வளாகத்தில் ஓகேயு- நட்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக்கூடாது,” என டிடிபிஏஎம் தலைவர் முருகேஸ்வரன் வீராசாமி கூறினார்.

குமிக் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று டிடிபிஏஎம் நம்புகிறது என்றார் அவர்.

ஜூலை 2010-இல், மலேசியா மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தது, ஆனால் அது நாட்டில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை, ஏனெனில் பிரிவு 3(b), 3(e) மற்றும் 5 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாத கோட்பாடுகள் குறித்து ஒரு விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஒப்புதலுக்கு முன்னர், மலேசியா மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2008-ஐ இயற்றியது.

மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2008, பிரிவு 28-ன் படி, மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுக் கல்வியைப் பெற – பாலர்பள்ளி, ஆரம்ப, இடைநிலை பள்ளிகள் மற்றும் உயர்க்கல்வி உட்பட, தொழிற்பயிற்சியும் பெற – மற்றக் குழந்தைகளுக்குச் சமமான நிலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உரிமை உண்டு.

மத்திய அரசியலமைப்பின் 8-வது பிரிவில் உள்ளதைப் போல, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களைப் போலவே கல்வி வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று முருகேஸ்வரன் மேலும் கூறினார்.

“கல்விக்குச் சமமான அணுகல் என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றாகும், மேலும் மாற்றுத் திறனாளிகள் என்பதால், அவர்கள் தேர்வு செய்யும் துறைகளில் வசதிகள் இல்லையென்ற காரணங்களுக்காக, பொது பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.