புதிய பிரதமராக வர, தனக்கு தேசிய முன்னணியின் (பிஎன்) ஆதரவு இருப்பதாகக் கூறி, செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர் பேரரசருக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று பிஎன் பொருளாளர் அலுவலகம் மறுத்துள்ளது.
ஆன்லைனில் பரவிய அக்கடிதம் “போலியானது மற்றும் பொய்யானது” என்று ஹிஷாமுடினின் தகவல் தொடர்பு குழு நேற்று தனது கீச்சகத்தின் மூலம் தகவல் கொடுத்தது.
“டி.எஸ் @ ஹிஷாமுதீன்எச்2ஓ-வுடன் (DS @HishammuddinH2O) இணைக்கப்பட்ட அந்தக் கடிதம் போலியானது மற்றும் பொய்யானது. இது ஒரு தீங்கிழைக்கும் அரசியல் விளையாட்டு, பொதுமக்களைக் குழப்புவதற்காக அவதூறு பரப்புதல்,” என்று அது கூறியது.
ஜூன் 22 தேதியிட்டதாகவும், நேற்று அரண்மனை அதிகாரிகளால் பெறப்பட்டதாகவும் கூறப்படும் அந்தக் கடிதத்தின்படி, பி.என். உச்சமன்றம் அவரைப் பிரதமராக ஏகமனதாக ஆதரிப்பதாக ஹிஷாமுடின் கூறியதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்கள் நஜிப் ரசாக் மற்றும் டாக்டர் மகாதிர் மொஹமட் ஆகியோரைப் பிரதமரின் ஆலோசனைக் குழுவில் நியமிக்க அவர் உறுதியளித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில், தேசியக் கூட்டணி, வாரிசானின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் ஆகியோர் அடங்கிய அமைச்சரவையை உருவாக்கும் முன்மொழியப்பட்ட பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்தப் பட்டியலில், பிரதமராகவும் நிதியமைச்சராகவும் ஹிஷாமுடின் பதவி வகிப்பார் என்றும், அஸ்மின் அலியும் இஸ்மாயில் சப்ரியும் முதல் மற்றும் இரண்டாவது துணைப் பிரதமர்களாகவும் முன்மொழியப்பட்டுள்ளது.