அம்னோ உச்சமன்றம் கட்சி தேர்தலை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது

அம்னோ அரசியலமைப்பின் அடிப்படையில், பெரும்பான்மை உச்சமன்ற உறுப்பினர்கள் கட்சி தேர்தலை 18 மாதங்களுக்கு ஒத்திவைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, அம்னோ அதை ஒத்தி வைத்தது.

அம்னோ உச்சமன்ற உறுப்பினரான ஒருவரின் கூற்றுபடி, இயங்கலையில் செய்யப்பட்ட தீர்மானத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

“தற்போதைய பி.கே.பி. 3.0 காரணமாக, அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடத்த முடியாத காரணத்தால்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அம்னோ தேர்தலை நடத்த வேண்டும் என்ற அழைப்பை புறக்கணித்ததாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஜீஸ் தெரிவித்தார்.

ஜாஹிட்டின் பதவி காலம் இந்த மாதத்தில் முடிவடைய வேண்டும் என்றும் அதன் பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நஸ்ரி கூறினார்.

“ஜாஹித், நாடாளுமன்றம் விரைவில் கூட வேண்டும் என்கிறார்.

“பொதுட் தேர்தலுக்கு ஏதுவானது என்றால், விரைவில் என்கிறார், ஆனால் கட்சித் தேர்தலை அவர் பொறுட்படுத்தவில்லை,” என்று நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.

கட்சியின் உள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமென்ற இதேபோன்ற அழைப்பை, ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுதீன் அபுபக்கர் கடந்த மார்ச் மாதம் செய்தார்.

15-வது பொதுத் தேர்தல் (ஜி.இ) நடைபெறுவதற்கு முன்பு, அம்னோ தேர்தல் கால அட்டவணையின்படி நடத்தப்பட வேண்டும் என்றார்.

பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிடான் காசிமும் இதே கருத்துக்குக் குரல் கொடுத்தார். கட்சி தேர்தலை ஒத்திவைக்காமல், அம்னோ அரசியலமைப்பின் படி செயல்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இருப்பினும், அம்னோ உச்சமன்றம் தேர்தலை 18 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யலாம் என்பதனையும் ஷாஹிடான் ஒப்புக்கொண்டார்.

தீர்மானத்தின் அடிப்படையில், ஜாஹிட் ஹமிடி 2023 வரை கட்சியை வழிநடத்துவார்.

இதற்கிடையில், மற்றொரு அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் இரஹ்மான் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

கட்சி தேர்தலை ஒத்திவைக்க, தேசியப் பாதுகாப்பு மன்றமும் சங்கங்களின் பதிவுத் துறையும் பரிந்துரைத்ததாகவும் அவர் விளக்கினார்.

“தேர்தலை ஒத்திவைக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர், எனவே, 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், அம்னோ தேர்தல் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.