கைரி : கட்டுமானத் துறைக்கான தடுப்பூசி ஜூலை 1 முதல் தொடங்குகிறது

கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி, பொதுப்பணி துறை அமைச்சின் ஒருங்கிணைப்புடன் தொடங்கும்.

இந்தத் துறைக்கான தடுப்பூசி திட்டம், கட்டுமான தளங்கள் மற்றும் பி.கே.பி. அமலாக்கத்தின் போது செயல்பட்டு வரும் கட்டுமான திட்டங்களில் கவனம் செலுத்தும் என தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் சொன்னார்.

“இப்போது செயல்பட்டு வரும் அனைத்து முக்கியமானப் பொருளாதாரத் துறைகளிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்று அவர், இன்று, கிள்ளான் துறைமுக ஆணையம் நடத்திய போக்குவரத்துத் துறைக்கான முதல் தடுப்பூசி திட்டம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவருடன் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங்கும் கலந்துகொண்டார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சருமான கைரி, தடுப்பூசி திட்டத்தை விரைவில் தோட்டத் துறைக்கும் விரிவுபடுத்தவுள்ளாதாகவும் சொன்னார்.

“தோட்டங்களும் செயல்பட்டு வருவதால், கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (சி.ஐ.தி.எஃப்.) தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சுடன் தடுப்பூசிக்கான கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது,” என்றார் அவர்

இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி, நாட்டில் முதல் மருந்தளவை 15.1 விழுக்காட்டினர் செலுத்தியுள்ளதாகவும், 5.8 விழுக்காட்டினர் இரண்டாவது மருந்தளவை முடித்துள்ளதாகவும் கைரி தெரிவித்தார்.

“எனவே, இரண்டாம் கட்டத்திற்கு (முழு நடமாட்டக் கட்டுப்பாடு) நுழைய நமக்குத் தேவையான 10 விழுக்காட்டை நாம் நெருங்கி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இன்று தொடங்கியப் போக்குவரத்துத் துறையின் தடுப்பூசி, பி.கே.பி.யில் இயங்கும் கடல், காற்று மற்றும் நிலத்தை உள்ளடக்கியத் தொழில்துறையின் மூன்றையும் உள்ளடக்கும் என்று கைரி கூறினார்.

-பெர்னாமா