பி.எச். : அவசர காலத்தை நீட்டிக்க தேவையில்லை

ஆகஸ்ட் 1-க்குப் பிறகு, அவசரகாலத்தை நீட்டிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தலைமை மன்றம் உறுதியாக உள்ளது.

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கு இடையிலான ஒரு கூட்டு அறிக்கையில், அவசரநிலை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிஎச் உறுதியாக இருப்பதாக அவர்கள் கூறினர்.

பி.எச்.-இன் கூற்றுப்படி, கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு அவசரநிலை உதவவில்லை என்பதே இதற்குக் காரணம், உண்மையில், கோவிட் -19 தொற்றுநோய் எண்ணிக்கை ஜனவரி 11-ல் அவசரநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது.

“அறிவியல் சான்றுகளும் தரவுகளும், அவசரகால நிலை நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கையுடன், அன்றாட மரணங்கள் அதிகமாக இருப்பதால், தொற்று நிலைமை கவலைக்கிடமாக மோசமடைந்துள்ளது என்பதனையே காட்டுகிறது,” என்று அவர்கள் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவசரகால சுதந்திர சிறப்புக் குழு, அவர்களின் இறுதிக் கூட்டத்தை ஜூலை மாதம் நடத்தவுள்ளதாகவும், அக்கூட்டத்தில் பி.எச். பிரதிநிதிகள் பல விஷயங்களை வலியுறுத்துவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

2021 ஆகஸ்ட் 1-க்குப் பிறகு, அவசரகாலத்தை நீட்டிக்க வேண்டாம் என்று மாமன்னருக்கு அந்தக் குழு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

“அவசரகால சிறப்புக் குழு அதன் செயல்பாட்டை முடித்துகொண்டு, ஆகஸ்ட் 1, 2021-க்குப் பிறகு கலைக்கப்படும்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.