ஆசிரியர் சிறப்பு ஆட்சேர்ப்பு : ‘இதுவரை இடம் கிடைக்காத கல்வித்துறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்’

இடைக்கால ஆசிரியர்கள் மற்றும் தற்போதுள்ள ஆசிரியப் பட்டதாரிகளுக்கு ‘ஒருமுறை’ (one-off) ஆசிரியர் சிறப்பு ஆட்சேர்ப்பு திட்டத்தில் முன்னுரிமை அளிக்குமாறும், அதனைக் கட்டங்கட்டமாக செயல்படுத்துமாறு பி.எச். கல்விக்குழு (ஜே.கே.பி.பி.எச்.) கல்வி அமைக்சைக் கேட்டுக்கொண்டது.

ஜூலை 7-ஆம் தேதி தொடங்கும் ஆட்சேர்ப்பில், ஆசிரியர் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறித்தும், இந்தக் குழு இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது.

“இந்த ஆட்சேர்ப்பு கவனமாகவும் கட்டங்கட்டமாகவும் செய்யப்பட வேண்டும் என்று ஜே.கே.பி.பி.எச். பரிந்துரைக்கிறது.

“கட்டம் 1 : தற்போது பள்ளியில் பணியாற்றி வரும், ஆனால் பணி உறுதி செய்யப்படாத, கல்வித் துறையில் டிப்ளோமா பெற்ற இடைக்கால ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவும்.

“கட்டம் 2: பிஐஎஸ்பி பட்டதாரிகள் (கற்பித்தல் இளங்கலை பட்டப்படிப்பு திட்டம்) மற்றும் ஐ.எஸ்.எம்.பி. (இளங்கலை கல்வி பட்டப்படிப்பு) ஆசிரிய வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், MYSPP-இல் ஏற்கெனவே 16,000 பேர் பதிவு செய்துள்ளனர்.

“கட்டம் 3: இன்னும் உள்ள இடைவெளிகளை நிரப்ப, உண்மையிலேயே தகுதியுள்ள பிற துறை சார்ந்த பட்டதாரிகளைத் தேர்வு செய்யுங்கள்,” என்று ஜே.கே.பி.பி.எச் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூன் 20-ம் தேதி, சில மாநிலங்களில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைத் தீர்க்கவும், கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில் சுமுகமாக கற்பித்தல் மற்றும் கற்றலை உறுதிப்படுத்தவும் 18,702 ஆசிரியர்களைச் சிறப்பு ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக ராட்ஸி கூறினார்.

இதற்கிடையில், ஆசிரியர் வேட்பாளர் நேர்காணல் மற்றும் தேர்வு செயல்முறை நேருக்கு நேர் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜே.கே.பி.பி.எச். கேட்டுக்கொண்டது.

“இது அவசர அவசரமாக இல்லாமல், உண்மையிலேயே தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவும்.

“இது தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படாவிட்டால் நாட்டின் கற்பித்தல் தரத்தின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும்,” என்று ஜே.கே.பி.பி.எச். சொன்னது.

சிறப்பு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதற்கு முன்னர், பொது பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு ஐ.எஸ்.எம்.பி. மாணவர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்யுமாறு ஜே.கே.கே.பி.எச். கேட்டுக்கொண்டது.

“அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பட்டம் பெறுவார்கள், ஆனால் இந்த ஆட்சேர்ப்பு காரணமாக மற்றவர்களால் இவர்களின் இடங்கள் நிரப்பப்படலாம். இந்த விஷயத்தை கல்வியமைச்சும் பல்கலைக்கழகங்களும் விவாதித்தனவா?” கேள்வி.

எனவே, எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னர், மலேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் மற்றும் பொது பல்கலைக்கழகங்களின் கல்வி நிறுவனத்துடன் கல்வி அமைச்சுடனும், சம்பந்தப்பட்ட பிறத் தரப்பினருடனும் ஒரு முழுமையான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜே.கே.கே.பி.எச். கூறினார்.