நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவையும் முன்வைக்க, மாட்சிமை தங்கியப் பேரரசர் முன் ஆஜராக வேண்டி, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாக அரண்மனை பிரதிநிதியிடமிருந்து புகார் அறிக்கை கிடைத்ததைக் கோலாலம்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியது.
மேலதிக விபரங்களை வெளியிடாமல், கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல் தலைமையகத்தில் (ஐபிடி), நேற்று அந்த அறிக்கை பெறப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர், ஏ.சி.பி. அனுவர் ஒமர், புகார்தாரர் இஸ்தானா நெகாரா அதிகாரி என்று தெரிவித்தார்
தேசிய முன்னணி (பிஎன்) கௌரவப் பொருளாளரின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி புலனச் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
“புதிய மலேசிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன், அரண்மனைக்குத் தேசிய முன்னணியில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளதாகப் புலனம் வழி தனக்கு செய்தி வந்துள்ளதாகப் புகார்தாரர் கூறியுள்ளார்.
“பின்னர், புகார் அளித்தவர் அரண்மனையில் விசாரித்தபோது, அதுபோன்ற கடிதம் அரண்மனைக்கு வரவில்லை என்பதையும், அக்கடிதம் போலியானது என்று சந்தேகிப்பதாகவும் கண்டறிந்தார்,” என்று அவர் நேற்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) 1998, பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் தனது தரப்பு தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக அனுவர் கூறினார்.
வியாழக்கிழமை, ஹிஷாமுதீனின் பத்திரிகை செயலாளர் மொஹமட் ஹபீஸ் அரிஃபின், அகோங்கிற்கு எழுதியக் கடிதம் தொடர்பாக டாங் வாங்கி காவல் நிலையத்தில் ஒரு போலீஸ் புகார் அறிக்கையைப் பதிவு செய்தார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தக் கடிதம் போலியானது மற்றும் ஹிஷாமுடினின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதோடு, பொது குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் விநியோகிக்கப்பட்டது.
- பெர்னாமா