சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமல்படுத்தப்பட்டதால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் டாக்ஸி மற்றும் வாடகை கார்கள் ஓட்டுநர்களும் அடங்குவர் என்று எம்.பி. டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.
மஸ்லீயின் கூற்றுப்படி, 2021 பட்ஜெட்டின் மூலம் டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ‘ஒன் ஆஃப்’ சலுகைகள் போதுமானதாக இல்லை, ஏனெனில் அவர்களின் வருமானம் இன்னும் பாதிக்கப்படும் நிலையிலேயே உள்ளது, குறிப்பாக பி.கே.பி. 3.0 தொடங்கியதிலிருந்து.
“ஆமாம், நான் மட்டுமின்றி, சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, பல தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தங்களின் பங்களிப்புகளைச் செய்தனர், ஆனால் அது போதவில்லை. அவர்களுக்கு, அவர்களின் சேவைகளுக்குப் பணம் செலுத்தக்கூடியப் பயணிகள் தேவை.
“அந்த விழிப்புணர்விலிருந்துதான், அவர்களின் கார் இயந்திரங்கள் எப்போதும் சூடாக இருக்க வேண்டும், அவர்களின் கார்கள் தொடர்ந்து நகர வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
“சிம்பாங் ரெங்கம் மக்கள் சேவை மையம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றுதான், நோய்வாய்ப்பட்ட, ஊனமுற்றோர் மற்றும் தடுப்பூசி மையத்திற்கு (பிபிவி) வாகனம் இல்லாத முதியவர்களுக்குப், பிபிவி செல்ல இலவச டாக்ஸி சேவை,” என்று மஸ்லீ தனது முகநூலில் கூறினார்.
பொது நன்கொடைகள் மூலம், இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது என்று மஸ்லீ கூறினார்.
அந்த வகையில், இது பி.கே.பி.யின் போது வருமானம் பாதிக்கப்பட்டுள்ள டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், பி.கே.பி. காரணமாக பிபிவிக்கு அழைத்துச் செல்ல பிள்ளைகள் இல்லாத அல்லது வாகனம் இல்லாத காரணத்தால் பிபிவிக்குச் செல்ல முடியாத நோயுற்றவர்கள், ஊனமுற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு இது உதவும்.
“உங்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளால், டாக்ஸி ஓட்டுநர்களின் பயணத்திற்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்,” என்று மஸ்லீ கூறினார்.
“சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற பொதுச் சேவை அலுவலகத்தைப் பொறுத்தவரை, வாடகை கார் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களை எங்களால் ஏற்பாடு செய்ய முடியும், அவர்கள் எங்கள் பிரதிநிதிகள், ஓட்டுநர்களுக்கு உதவ என்னால் முடிந்தது இதுதான்,” என்று அவர் கூறினார்.