புதியக் கோவிட் -19 நேர்வுகளுக்குக் காரணம் தொழிற்சாலைகள் அல்ல – அஸ்மின்

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக, தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற அழைப்பில் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலி உடன்படவில்லை.

நேற்றிரவு, கீச்சகப் பயனர் @ravin_surandran, ஆதரித்து, புதிய கோவிட் -19 நேர்வுகளில் பெரும்பாலானவை, “சீரற்ற” பரவலின் விளைவாகும், தொழிற்சாலையிலிருந்து அல்ல என்று அஸ்மின் கூறினார்.

“நாம் முடிந்தவரை திறந்திருக்க வேண்டும். நிறைய பேர் உண்மைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தற்போது தொழிற்சாலைகள் பிரச்சினை அல்ல,” என்று @ravin_surandran எழுதியதற்கு, “சரியானது” என்று அஸ்மின் பின்னர் பதிலளித்தார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின், கோவிட் -19 சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோவை மேற்கோள் காட்டி, அந்நிறுவனம் பணிநிறுத்தத்தை ஊக்குவிக்கவில்லை என்று அஸ்மின் தெரிவித்தார்.

“உலக பொருளாதாரம் தீவிரப் பொருளாதார சேதத்தின் விளைவாக இழப்புகளை சந்திக்க வேண்டாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது, குறிப்பாக குறைந்த வருமானத்தில் இருப்பவர்களை அது மிகவும் பாதிக்கிறது.

“அதே நேரத்தில், மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது, குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி திட்டம், நாம் முன்னோக்கிச் செல்ல உதவும்,” என்று அஸ்மின் சொன்னார்.

ஜூன் 1-ஆம் தேதி தொடங்கிய “முழு பி.கே.பி.” அமலாக்கத்தின் போது, செயல்பட விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் கோவிட் -19 (சிம்ஸ் 3.0) ஸ்மார்ட் மேனேஜ்மென்ட் அமைப்பைச் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு தற்போது இயக்கி வருகிறது.

உற்பத்தித் துறையில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டத்தையும் மிட்டி நடத்துகிறது.

நாளை முதல் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில், இறுக்கமாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி) செயல்படுத்தவுள்ளதாக புத்ராஜெயா அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அஸ்மின் கீச்சகத்தில் தோன்றினார்.