ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) உயிர்க்கோள இருப்புநிலையாக, சினி ஏரியின் நிலை அவ்வப்போது மதிப்பிடப்படுகிறது, மேலும் அதன் நிலையை நிலைநிறுத்துவதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான கால அவகாசம் உள்ளது.
கடந்த மே 18-ம் தேதி, பூர்வாங்கத் திட்டங்களின் பட்டியல், சம்பந்தப்பட்ட மலேசிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக, தனது ஊடகச் சேவைகள் பிரிவு மூலம் யுனெஸ்கோ மலேசியாகினிக்குத் தெரிவித்தது.
“சினி ஏரியின் உயிரினக் கோள இருப்பு குறித்த கால மதிப்பீடுகள் உண்மையில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் உயிர்க்கோள இருப்புக்கான சர்வதேச ஆலோசனைக் குழுவால் அந்த அறிக்கை ஆராயப்பட்டு வருகிறது.
“இந்தப் பரிந்துரைகள், 2021 மே 18 அன்று, மலேசிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஒப்புதல் அளிக்கப்பட்டதும், உயிர்க்கோள இருப்புக்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் 2022 செப்டம்பர் வரை ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்,” என்று அது மலேசியாகினியிடம் கூறியது.
இறுதி வரைவுக்கு ஒப்புதல் அளிக்கும்போது, செப்டம்பர் மாதத்தில் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் அறிவிக்கப்படும் என்று அது மேலும் கூறியது.
பஹாங்கில் உள்ள சினி ஏரி, மலேசியாவின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியாகும், இது பசுமையான வெப்பமண்டல மழைக்காடு பல்லுயிர் பெருக்கத்தின் வாழ்விடமாகும்.
2009-ஆம் ஆண்டில், யுனெஸ்கோ நூற்றுக்கணக்கான தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நன்னீர் மீன்களின் இருப்பிடமாக விளங்கும் இப்பகுதியை அதன் உயிர்க்கோள இருப்புகளில் ஒன்றாக அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு யுனெஸ்கோ இருப்பும், 10 வருடங்களுக்கு ஒருமுறை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும்.
அப்படியிருந்தும், சுற்றுச்சூழல் அழிவு பிரச்சினையை சினி ஏரி எதிர்கொண்டது, காடழிப்பு மற்றும் சுரங்க நடவடிக்கைகளால் சமீபத்தில் பலரின் கவனத்தை அது ஈர்த்தது, இப்பகுதியை மீட்டெடுப்பதாக பஹாங் அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.
சமீபத்தில், அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரண்மனை தொடர்புடைய சுரங்கத் திட்டங்களும் இதில் அடங்கும்.
இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இ.ஐ.ஏ.) அறிக்கையும் இப்பகுதியில் இன்னும் பல சுரங்க நடவடிக்கைகள் உள்ளன என்பதைக் காட்டுகிறது, அவற்றில் பெரும்பாலானவை சினி ஏரிக்கு மிக நெருக்கமாக உள்ளன.
2019-ஆம் ஆண்டில், அரசிதழ் வர்த்தமானியை மாநில அரசு அறிவித்த போதிலும், தாசேக் சினி ஒரு நிரந்தர வனக் காப்பகமாக, அதிகாரப்பூர்வமாக வர்த்தமானி செய்யப்படவில்லை என்றும் மலேசியாகினி தெரிவித்துள்ளது.
உயிர்க்கோள இருப்பு நிலை பட்டியலிலிருந்து சினி ஏரி நீக்கப்படலாம்
இப்பகுதியில் மாசுபாடு தொடர்ந்தால், சினி ஏரி அதன் யுனெஸ்கோ உயிர்க்கோள இருப்பு நிலையை இழக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சமீபத்தில் எச்சரித்தனர்.
மனித மற்றும் உயிர்க்கோளத் திட்டத்தின் கட்டமைப்பின் படி, யுனெஸ்கோ உயிர்க்கோள இருப்பு அது தகுதிவாய்ந்த நிலைமைகளின் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாவிட்டால் அதன் நிலையை இழக்கக்கூடும்.
எவ்வாறாயினும், யுனெஸ்கோ மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், உலக உயிர்க்கோள இருப்புக்களின் பட்டியலில் இருந்து தாசிக் சினியை நீக்குவது ஒரு கடைசி முயற்சியாக மட்டுமே கருதப்படுகிறது, எல்லா முயற்சிகளும் ஒரு முற்றுப்புள்ளியை கண்டால் மட்டுமே.
நிரல் கட்டமைப்பின் 9-வது பிரிவைப் பற்றி குறிப்பிடுகையில், யுனெஸ்கோ, உயிர்க்கோள இருப்புக்கள் தொடர்பான இடை-அரசு ஒருங்கிணைப்புக் குழு (ஐ.சி.சி.) சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு, அவர்களின் உயிர்க்கோள இருப்புக்கள் அதன் அளவுகோல்களின் விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாட்டிற்கு உதவ, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் திட்ட செயலகத்திற்கு அக்குழு தெரியபடுத்தும்.
“பிரிவு 4-இல் உள்ள, கேள்விக்குரிய உயிர்க்கோள இருப்பின் அளவுகோல்களை ஒரு நியாயமான காலத்திற்குள் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஐ.சி.சி. கண்டறிந்தால், அந்தப் பகுதி இனி வலையமைப்பின் ஒரு பகுதியாக, ஓர் உயிர்க்கோள இருப்பு எனக் குறிப்பிடப்படாது,” என்று அதன் சட்டரீதியான விதிகள் கூறுகின்றன.