கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில், கோவிட் -19 அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள் கடும் அழுத்தத்தில் உள்ளன.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவிப் பகுதியின் தரையில் நோயாளிகளைக் கிடத்தி, மருத்து நடைமுறையில் ஈடுபடும் மற்றும் படுக்கைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளன.
கிள்ளான் தெங்கு அம்புவான் இரஹிமா மருத்துவமனையின் (எச்.தி.எ.ஆர்.) ஒரு சுகாதார ஊழியர், அவசரச் சிகிச்சை பிரிவில் படுக்கைகள் மற்றும் சக்கர நாற்காலிகளுக்காகக் காத்திருக்கும், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளைக் காட்டும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்.
மருத்துவமனையின் கோவிட் -19 வார்டில் 280 படுக்கைகள் உள்ளன என்று மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் பலர் வார்ட்டில் அனுமதிக்க காத்திருக்கிறார்கள்.
கோவிட் -19 நோயால் பாதிக்கப்படாதவர்கள் உட்பட, சுமார் 100 நோயாளிகள் எச்.தி.ஏ.ஆர். அவசரச் சிகிச்சை பிரிவு படுக்கைகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என பல ஆதாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளன.
இதன் பொருள், அவசரச் சிகிச்சை பிரிவு, ஒரு வார்டு போன்ற சேவைகளை வழங்க வேண்டும் – அது அந்த நோக்கத்திற்காக இல்லாவிட்டாலும் கூட.
அவசரகாலச் சேவைகளுக்குப் பயிற்சி பெறாவிட்டாலும், பிற துறைகளைச் சேர்ந்த புதிய மருத்துவ அதிகாரிகள் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எச்.தி.ஏ.ஆர். உண்மையில் எப்போதும் ஓய்வில்லாமல் இருக்கிறது, அவசரகால வார்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுக்கைகளுக்காகக் காத்திருப்பது பொதுவானது.
“ஆனால், கடந்த இரண்டு வாரங்களில், 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பதால் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது,” என்று பெயரிட மறுத்த ஒருவர் மலேசியாகினியிடம் கூறினார்.
சிவில் சேவையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், தங்கள் மேலதிகாரிகளின் அனுமதியின்றி ஊடகங்களுடன் பேச அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த விவகாரம் குறித்து, மலேசியாகினி சிலாங்கூர் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் ஷரீமான் ங்காடிமானைத் தொடர்பு கொண்டுள்ளது.
‘தரையில் மருத்துவ நடைமுறைகள்’
இதற்கிடையில், கோலாலம்பூர் மருத்துவமனையில் (எச்.கே.எல்.), அவசரச் சிகிச்சை பிரிவில் உள்ள ஊழியர்கள் முக்கியமான சில மருத்துவ முறைகளை – அவற்றில் சில உயிர் சம்பந்தப்பட்டவை – தரையில் செய்ய வேண்டியுள்ளது.
எந்தப் படுக்கைகளும் – கேன்வாஸ் மடிப்பு படுக்கைகள் உட்பட – எதுவும் காலியாக இல்லை என்பதே இதற்குக் காரணம் என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
“மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிருக்காகப் போராடுகிறார்கள். முதலில் யார் ‘செல்ல வேண்டும்’ என்பதைப் பார்த்து தீர்மானிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
“நாங்கள் இங்கு என்ன செய்கிறோம் என்பதை யாரும் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள். நாங்களே சக்தியற்ற நிலையில் இருக்கும் நேரத்தில், மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றும்படி கேட்கிறார்கள்.
“எங்களால் முடிந்ததை மட்டுமே செய்ய முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது போதவில்லை,” என்று ஒரு சுகாதார ஊழியர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் கூறினார்.
எச்.தி.ஏ.ஆர்.-ஐப் போலவே, எச்.கே.எல்.-இல் உள்ள கோவிட் -19 வார்டிலும் கிடைக்கக்கூடிய இடங்களில் எல்லாம் கூடுதல் படுக்கைகள் போடப்பட்டுள்ளன என்று மருத்துவமனை சார்ந்த ஒருவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“நீங்கள் இங்கு வந்தால், எங்கள் வார்டுகள் ஒரு மருத்துவமனையின் சாதாரண வார்டு போல இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள். படுக்கைகளுக்கு இடையில் அதிக இடம் இல்லை,” என்று பெயர் குறிப்பிட மறுத்த ஒருவர் தெரிவித்தார்.
கோவிட் -19 தவிர, மற்ற சிகிச்சைகளையும் இந்த நிலை பாதித்துள்ளதாக ஒரு சுகாதார ஊழியர் கூறினார், தொற்று நோயாளிகளுக்கு அதிக படுக்கைகள் வழங்கப்பட்டதால்.
“கோவிட்-19 அல்லாத நோயாளிகள் எங்குச் செல்ல முடியும்? நாங்கள் ஒரு பொது மருத்துவமனை. நாங்கள் அவர்களை வேண்டாமென்று ஒதுக்கினால், அவர்கள் எங்கே போவார்கள்?” எனப் பெயரிட மறுத்த மற்றொருவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து, மலேசியாகினி எச்.கே.எல். இயக்குநர் டாக்டர் ஹெரிக் கோரேவைத் தொடர்பு கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பல வட்டாரங்கள், கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து பொது மருத்துவமனைகளும் இதேபோன்ற நிலையில் உள்ளன, புத்ராஜெயா மருத்துவமனையைத் தவிர என மலேசியாகினியிடம் தெரிவித்தன.
சுகாதார ஊழியர்களின் கூற்றுப்படி, இவ்வளவு காலமாகப் பொது சுகாதாரச் சேவைகளுக்கான நிதி பற்றாக்குறையுடன் இந்த நெரிசல் தொடர்புடையது.
இரண்டு வாரங்களுக்குள் நேர்வுகள் குறைக்கப்பட்டால் மட்டுமே கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகள் உயிர் பிழைக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
“பொதுமக்கள் எங்களுக்கு உதவுவதற்கான ஒரே வழி, தொற்றுநோயிலிருந்து தங்களைத் தவிர்ப்பதே, முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள், வாய்ப்பு கிட்டும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்,” என்று ஒரு சுகாதார ஊழியர் கூறினார்.
சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவைத் தொடர்பு கொண்டபோது, கிள்ளான் பள்ளத்தாக்கின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மருத்துவமனைகளுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது என்றார்.
“சிலாங்கூர் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையிலான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், கிள்ளான் பள்ளத்தாக்கில், தீவிரச் சிகிச்சையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகிறது,” என்று அவர் கூறினார்.
புதிய நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, சிலாங்கூரின் ஏராளமான பகுதிகளிலும் கோலாலம்பூரின் சில பகுதிகளிலும் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.டி.) நாளை முதல் தொடங்கப்படும்.
பி.கே.பி.டி.யின் முந்தைய அமலாக்கத்தின்படி, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்படும்.
இருப்பினும், இந்த நேரத்தில் பி.கே.பி.டி. குடியிருப்பாளர்கள் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவைத் தாண்டாமல், வெளியே செல்ல அனுமதிக்கிறது.
அத்தியாவசியச் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.