அமைச்சர் : பி.கே.பி.டி. பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படுகின்றன

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பி.கே.பி.டி. பகுதிகளில், கட்டுமானம் மற்றும் அது தொடர்புடைய அனைத்து பணிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

“இதன் பொருள் என்னவென்றால், முன்னதாகப் பெறப்பட்ட மிட்டியின் அனுமதி கடிதத்தை, பி.கே.பி.டி. காலத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடரப் பயன்படுத்த முடியாது.

“இருப்பினும், இயற்கை பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் கம்பியிழைவு (வயரிங்) போன்ற முக்கியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

“மேற்கண்ட பணிகளைச் செய்ய, சம்பந்தப்பட்ட தரப்பினர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெறலாம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 1-ஆம் தேதி, தேசியப் பாதுகாப்பு மன்றம் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரின் பல பகுதிகளில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி.), ஜூலை 3 முதல் 16 வரையில், 14 நாட்களுக்குச் செயல்படுத்த முடிவு செய்தது.

பல்வேறு நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் மூலமாகவும், சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பி.கே.பி.டி.-ஐ அமல்படுத்தும்போது, என்ன செய்ய முடியும், செய்ய முடியாது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்.ஓ.பி.க்கள், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பி.கே.பி.டி. வட்டாரங்களுக்குப் பொருந்தும். எஸ்.ஓ.பி. பற்றிய விரிவான தகவல்களை எம்.கே.என். இணையதளத்தில் https://www.mkn.gov.my காணலாம்.