‘பெரும்பாலான முதலாளிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்பவில்லை’

கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, ‘தொழிலாளர்களுக்காக பணியாற்றுதல்’ (Working for Workers) விண்ணப்பத்தின் மூலம், மனிதவள அமைச்சு பெற்ற மிக அதிகமான புகார்கள், முதலாளிகள் தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவில்லை (பி.டி.ஆர்) என்பதாகும்.

மனிதவளத் துணை அமைச்சர் அவாங் ஹாஷிம் கூறுகையில், நாடு முழுவதும் இருந்து, பல்வேறு வழக்குகளை உள்ளடக்கிய மொத்தம் 4,267 புகார்கள் வந்துள்ளன, அவற்றுள் 1,876 புகார்களைப் பதிவு செய்ததன் மூலம் பி.டி.ஆரை அனுமதிக்காத வழக்கு முன்னணியில் உள்ளன.

மொத்தம் 4,267 புகார்களில், சிலாங்கூரில் 1,451 புகார்களும், கோலாலம்பூர் (1,007), ஜொகூர் (539), பினாங்கு (292) எனப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“பி.டி.ஆர். புகார்கள் தவிர, 1,013 புகார்கள் சம்பளம் செலுத்தப்படாத அல்லது தாமதமாக சம்பளம் செலுத்தும் வழக்குகள் தொடர்பானவை, மேலும் 308 புகார்கள் சட்டத்தின் படி அல்லாமல் ஊதியக் குறைப்புகளைக் கொண்டுள்ளன.

“இது தவிர, 263 புகார்கள் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம், 254 புகார்கள் கூடுதல் நேர ஊதியம் மற்றும் பணி நீக்கச் சலுகைகள் வழங்கப்படாமை, 107 புகார்கள் முதலாளிகள் குறைந்தபட்ச ஊதியம் வழங்காமை, வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இல்லாத 81 புகார்கள் மற்றும் வருடாந்திர விடுப்பு இல்லாத 66 புகார்களும் அடங்கும்,” என, ஜொகூர் பாருவில் இன்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நாடு முழுவதும் 109,809 பணியாளர்கள் தங்குமிடங்களை உள்ளடக்கிய, 20,371 முதலாளிகளை இதுவரை ஆய்வு செய்துள்ளதாக அவாங் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, பல்வேறு குற்றங்களைச் செய்த முதலாளிகளுக்கு எதிராக, 793 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன, அவற்றில் 125 நாடு முழுவதும் அமர்வு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு, RM431,000 தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகள் செய்த பெரும்பாலான குற்றங்களில், மனிதவளத் துறை தலைமை இயக்குநரின் சான்றிதழ் இல்லாமல் பணியாளர்களைத் தங்குமிடத்தில் வைத்தது, குறைந்தபட்சத் தேவைகளுக்கு இணங்காதது அல்லது ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்காதது என அவாங் கூறினார்.

-பெர்னாமா