சட்ட அமைச்சராக ராய்ஸ் – குவான் எங் முன்மொழிந்தார்

தக்கியுடின்ன் ஹாசனுக்குப் பதிலாகப் பிரதமர் திணைக்களத்தில் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) புதிய அமைச்சராக, ராய்ஸ் யாத்திமை நியமிக்க வேண்டும் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பரிந்துரைத்தார்.

இந்த மாதத்திற்குள், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த அகோங்கின் உத்தரவுக்கு “விசுவாசமும் கீழ்ப்படிதலும்” இருப்பதை உறுதி செய்வதற்காக, மேலவை சபாநாயகரான ராய்ஸுடன் தக்கியுடின் அதிகாரப்பூர்வப் பதவிகளை மாற்றிக் கொள்ளுமாறு அவர் பரிந்துரைத்தார்.

“நாடாளுமன்றத்தின் பொறுப்பான சட்ட அமைச்சராக, ராய்ஸ் இருப்பதால், கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிப்பதில் தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தோல்வி மற்றும் அவசரக் காலம் ஆகிய இரண்டையும் விவாதிக்க, நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பதை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வேலையை அவர் செய்வார்.

“மக்கள் நலனுக்காக சட்டத்தை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ள தலைவர்கள் நாட்டுக்குத் தேவை, தங்கள் பதவிகளின் நன்மைகளையும் சலுகைகளையும் பாதுகாப்பதில் மட்டுமே ஆர்வமுள்ள அரசியல்வாதிகள் அல்ல,” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் நாடாளுமன்றம் அமர வேண்டும் என்றும், அவசரக் கட்டளை 2021, நாடாளுமன்றத்தை அமர அழைக்க அகோங்கிற்கு அதிகாரம் அளிக்கிறது என்றும் ராய்ஸ் முன்பு வாதிட்டார் – பல வழக்கறிஞர்கள் எதிர்த்த போதிலும்.

இதற்கிடையில், அவசரகாலம் முடிந்ததும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று தக்கியுடின் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த மாதம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என்றும், அடுத்த புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை இந்த விஷயத்தை இறுதி செய்யும் என்றும் தக்கியுடின் நேற்று உறுதி அளித்தார்.

மத்திய அரசியலமைப்பின் 150 (3)-வது பிரிவின்படி, அவசரப் பிரகடனங்கள் மற்றும் அவசரகாலக் கட்டளைகளை விவாதிக்க, நாடாளுமன்றம் “கூடிய விரைவில்” கூட்டப்பட வேண்டும் என்று அகோங் முன்பு கூறியிருந்தார்.

நாடாளுமன்றம் அவ்வாறு செய்ய விரும்பினால், பிரகடனங்களும் அவசரக் கட்டளைகளும் இரத்து செய்யப்படலாம் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.