கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (எச்.கே.எல்.) படுக்கைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதன் விளைவாக சில நோயாளிகள் தரையில் சிகிச்சை பெற்றனர் என்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹெரிக் கோரே தெரிவித்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான நேர்வுகள், கோவிட் -19 நிலை 4 நோயாளிகள் சம்பந்தப்பட்டது என்று அவர் கூறினார்.
தீவிரச் சிகிச்சை பிரிவின் (ஐ.சி.யூ.) தேவையும் ‘மிக அதிகமாக’ உள்ளது என்றார் அவர்.
இருப்பினும், படுக்கை பயன்பாடு அவ்வப்போது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும், ஐ.சி.யூ. ஊழியர்களுக்கு மற்ற துறைகளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் உதவுகிறார்கள் என்றும் கோரே கூறினார்.
நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுவதைக் காட்டும் ஒரு புகைப்படம் ஊடகங்களில் பரவிய நிலையில், சுகாதார ஊழியர் ஒருவர் எச்.கே.எல்.-இன் நிலைமை ‘மிக மோசமாக’ உள்ளது என்று கூறியதை அடுத்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவசர வார்டில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த கோரே, ஒரு நோயாளி மயக்கத்தில் கொண்டு வரப்பட்டார், மூச்சு விடவில்லை, துடிப்பு இல்லை என்று கூறினார்.
“அந்த நேரத்தில் அனைத்து படுக்கைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் தரையில் ஒரு தட்டையான மேற்பரப்பு இருப்பது கண்டறியப்பட்டது, உடனடியாக சிபிஆர் செய்ய அந்த இடம் சிறந்தது,” என்று அவர் நேற்றிரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும், நோயாளியை மீட்க முடியவில்லை என்றும், மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண உடற்கூறு சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், தரையில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நோயாளியின் சிகிச்சை குறித்தும் கோரே கருத்து தெரிவித்தார்.
நோயாளிக்கு வலிப்புத்தாக்கங்கள் இருந்ததாகவும், படுக்கையில் இருந்து விழும் ஆபத்து இருந்ததாகவும் அவர் கூறினார்.
“பாதுகாப்பு காரணிகள் மற்றும் உடனடி சிகிச்சையின் காரணமாக, நோயாளி தரையில் படுக்க வைக்கப்பட்டார், இல்லையேல் நுரையீரலுக்குள் உமிழ்நீர் நுழைந்து, நோயாளிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
மேலும், தற்போதைய மோசமான நிலைமைகளைச் சமாளிக்க, 2020 டிசம்பரிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை எச்.கே.எல். ஒத்திவைத்துள்ளது என்றும் கோரே சொன்னார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்கள் ஆபத்து நிலையில் இல்லாதபோது, செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்றார் கோரே.